மங்களகரமான கார்த்திகை மாதம், கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை என்னும் பெரிய கார்த்திகை ஜோதி தரிசனம் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. நிறைவு நாள் விழாவாக கோயிலில் பரணி தீபம் ஏற்பட்டவுடன், மலை உச்சியில் அண்ணாமலையார் தீபஜோதி எனும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
ஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில், சுமார் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.
விளக்கு ஏற்றி ஜோதி சொரூபமாக இறைவனை விளங்குவது மிகவும் பிரசித்தி பெற்றதும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையுமாகும். சிவனடியார்களும் நாயன்மார்களும் இறைவனை ஜோதிப்பிழம்பு என்றும் சுடர்ஒளி என்றும் ஞானஒளி என்றும் போற்றி பாடியுள்ளனர். ஜோதி வடிவில் இறைவனை தரிசித்தும் உள்ளனர்.
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.
திருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள்பாலிக்கும் விசிறி சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில், ‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்பு பந்து வடிவமாக உள்ளார்’ என்று கூறுகிறார்.
தீபத் திருநாளில் ஆலயங்கள் தவிர இல்லங்களிலும் தீப வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் முடித்த பிறகு அருகில் உள்ள ஆலயத்தில் அர்ச்சனை செய்து முடித்தவுடன் வீட்டில் தினைமாவில் விளக்கேற்றி வழிபாடு செய்து விரதம் முடிப்பார்கள்.
பூஜை அறை, வரவேற்பறை, கூடம், சமையலறை, நடுவாசல் உள்பட வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் தீபஜோதிகள் நமது ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம் எனும் அறிவொளியை ஏற்படுத்துவதாக ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாளில் சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள், சிவகாயத்ரி சொல்வது சிறப்பு.
தீபஜோதி வழிபாடானது இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. தீபஜோதியாக நின்று உலகை காக்கும் பரம்பொருளை வழிபட்டு சகல நலமும் பெறுவோமாக.
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.