திருச்சி: திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி அடுத்த திருவாசி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகா உடனுறை மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மாற்றுரைத்து பொற்கிழி அளித்தமையால் சுவாமி மாற்றுரை வரதர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று கும்பா பிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. 12ம் தேதி விநாயகர் வழிபாடு, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 6 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. 5 நிலை ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கும், மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார சன்னதிகளின் விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.
பின்னர் மூலஸ்தானத்தில் மாற்றுரைவரதீஸ்வரர், அம்பாள் பாலாம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபி ஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மகாதீபாராதனை மற்றும் மகாஅபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடை பெற்றது. இரவு 8மணியளவில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீகர் ராஜா பட்டர் தலைமையில் 140 சிவாச்சாரியார்கள் நடத்தினர். கும்பாபிஷேகத்தையொட்டி இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணை யர் முல்லை, தக்கார் ஜெய்கிஷன், செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.