நவராத்திரி விரதம்
நவராத்திரி ஆரம்பம் : 28-ம் தேதி புதன்
பத்ரகாளி அஷ்டமி : அக்டோபர் 4-ம் தேதி செவ்வாய்
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை : அக்டோபர் 5-ம் தேதி புதன்
பூஜை செய்ய உகந்த நேரம்:
காலை 9.00-10.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 9.00
விஜயதசமி: அக்டோபர் 6-ம் தேதி வியாழன்.
சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி கொலு நிறைவடைகிறது. விஜயதசமி அன்று காலை 9 - 10 மணிக்குள் மறுபூஜை செய்து கும்பத்தை எடுக்கலாம். பிறகு பொம்மைகளை படியில் இருந்து எடுத்து வைக்கலாம்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்த விழா ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் நம் கலாசாரத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளாக இருக்கும் சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி, ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பாகும்.
மற்ற விசேஷங்கள், பண்டிகைகள் எல்லாம் அஷ்டமி, நவமி, திதிகளை தவிர்த்து மற்ற திதிகளிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நவராத்திரியில் அஷ்டமி, நவமி, தசமி திதிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அஷ்டமியன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று ஆக்ரோஷமான தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி தேவியை வணங்கும் நாள். தீய சக்திகள் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை நம்மை நெருங்காமல் இருக்க துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வணங்கி வழிபடுகிறோம்.
நவம் என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்..’ என்று பெரியோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன. இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள்.
நவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.
நவராத்திரி முக்கியமாக பெண்களின் பண்டிகையாகும். குமரி பூஜை இந்த விழாவில் மிகவும் முக்கியமானது. 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமாக வேடமிட்டு அவர்களை அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும்.
மேலும் அவரவர் வசதிக்கு ஏற்ப 1, 3, 5, 7, 9, 11 என்ற எண்ணிக்கையில் கொலுபடிகள் அமைத்து அதில் எல்லா வகையான கடவுள் சிலைகள், பறவைகள், மிருகங்கள், பொம்மைகள் என அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு தேங்காய், மாவிலை சொருகி வைக்க வேண்டும். அல்லது அவரவர் குடும்ப வழக்கப்படியும் செய்யலாம். அதே படியில் முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். பின்னர் அடுத்தடுத்த படிகளில் பிற தெய்வங்கள், தசாவதாரம், மனிதர்கள், விலங்குகள், பிற உயிரினங்கள் என படிப்படியாக வைக்கலாம். தினமும் மாலையில் கொலுவுக்கு தனியாக கோலம் போட்டு, விளக்கேற்றி வைத்து, லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஸ்லோகங்கள் சொல்வது சிறப்பு. நைவேத்யம் செய்த சுண்டல், சர்க்கரை பொங்கல், பழங்கள், இனிப்புகள் மற்றும் வெற்றிலை பாக்கு, புஷ்பம், குங்குமம், மஞ்சள், தேங்காய் போன்ற மங்கள பொருட்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து ஆசி பெறுவதே இந்த நோன்பின் தத்துவமாகும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.