பல்வேறு விதமான சாஸ்திர சம்பிரதாயங்களை நம் முன்னோர் பன்னெடுங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். அவற்றுக்கு நிச்சயமாக ஏதாவது காரணமும், அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில், தமிழ் மாத பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாதப் பிறப்பாகும்.
இந்த வருடம் ஜூலை 16-ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் சோம வார பிரதோஷம் சேர்ந்து வருவதால் மாதப் பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும் விரத வழிபாடுகளும் களைகட்டும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். என்பது ஐதீகம். ஆடிவெள்ளி அன்று அம்மன் வழிபாடு மிகப் பிரசித்தம். இது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். குழந்தைப் பேறு கிடைக்கும். ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்களையும், பிரார்த்தனைகளையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள். பிரசித்தி பெற்ற அம்மன், அம்பாள் ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள். கிரக பரிகார தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருவார்கள்.
இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நதிகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் இம்மைக்கும், மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு என்பது சிறப்புமிக்க விழாவாகும். இந்த விழா நம் கலாசாரத்தையும், உறவின் வலிமையையும் பிரதிபலிக்கும் அம்சமாக விளங்குகிறது. மேலும் நதிகள், நீர்நிலைகள், கடல் போன்ற இயற்கை அமைப்புகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் திகழ்கிறது.
ஆடி 18-ம் நாளில் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் குடும்பம் குடும்பமாக கூடி அமர்ந்து உணவு உண்பது மரபாகும். புதுமண தம்பதிகள் நிலாச்சோறு உண்டு, தாலி மாற்றி, புதுத் தாலிக்கயிறு அணிவதும் வழக்கமாகும். கன்னிப் பெண்கள் திருமணம் கூடிவர அம்மனை வேண்டி கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பிரசித்தி பெற்றது கோமதி அம்மனின் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான். புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார் ஆடிப்பூரம் பூமி பிராட்டி ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரமாகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடக்கும்.
கன்னிப் பெண்கள் விரதம் இருந்து வணங்க திருமண பிராப்தம் கூடிவரும் என்பது நம்பிக்கை. இத்தனை சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் நல்ல விஷயங்கள் தொடங்கக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இவையெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப பரப்பப்பட்ட வதந்திகளாகும். பொதுவாக இந்த மாதத்தில் கிராமங்களில் விரதங்கள், வழிபாடுகள், சாமி கும்பிடு விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் சுப விசேஷங்களை தவிர்த்து, அதற்கு அடுத்த மாதமான ஆவணியில் தொடங்கினார்கள்.
ஆகையால் நம் முன்னோர்களின் செயல்களுக்கு ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது. சில விஷயங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்துவிட்டதாலும் மறைக்கப்பட்டதாலும், மருவி விட்டதாலும் உண்மையான தத்துவங்களை நாம் தெரிந்தகொள்ள முடியாமல் போய்விட்டது. ஆகையால் இந்த மாதத்தை இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். ஆகையால் மாதங்களில் எந்த குறையும், குற்றமும் இல்லை. ‘வடிவாய் நின்வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு’ என்று ஆழ்வார்களால் பாடப்பட்ட பூமாதேவியின் அம்சமாக ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தது ஆடிப்பூரத்தில்தான் என்பது ஆடி மாதத்தின் மகிமையை உணர்த்தும் வரிகளாகும். ஆடி மாதத்தில் இறை பக்தி செலுத்தி எல்லாம் வண்ட ஆண்டவன் அருள் பெறுவோமாக.
‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.