குர்பானி (தியாகம்) அல்லாவுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ராஹிம் நபிக்கு 90 வயதில் மகன் பிறக்கிறான். அந்த மகன் சிறுவனாக இருக்கும்போது, ‘எனக்காக அவனை பலி கொடு’ என அல்லா உத்தரவிட்டதும் தியாகத்துக்கு தயாராகிறார் இப்ராஹிம். அவரது தியாக உள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோகும் இறைவன், ‘உனது மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலி கொடு போதும்’ என்கிறான். அந்த புனித தினத்தைதான் தியாக திருநாளாக முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். தியாகம் என்பது வெறும் போருடன் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது என்கிறது இஸ்லாம். இப்ராஹிம் நபியின் இந்த தியாக சம்பவம் அதற்கு உதாரணம்.
தனது சகோதரனுக்கு ஒரு நல்லது என்றால் தனக்கு கிடைக்கும் பணம், பொருளை தியாகம் செய்வதும் அல்லாவுக்கு பிடித்த விஷயம். தந்தைக்கு உடல்நலம் குன்றியிருந்தால் இரவு, பகலாக அவருக்கு சேவை புரிந்து தனது ஓய்வை மகன் தியாகம் செய்வதுகூட அல்லாவுக்கு பிடிக்கும். சிறிதளவு கிடைத்த உணவைகூட, பசித்திருக்கும் அண்டை வீட்டாருக்கு பகிர்ந்துகொடுப்பதும் தியாக செயல்களில் ஒரு பகுதிதான். தியாக செயல்கள் பலவகைப்பட்டாலும் புனித போரில் கொல்லப்படுவது தியாகத்தில் பெரிய தியாகம் என்பதிலும் இஸ்லாத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள ‘புனித போர்’ என்பது என்ன? பலர் எழுப்பும் கேள்வி இது. இஸ்லாத்தை பரப்ப, உலகம் முழுவதும் ஏராளமான நபிகள் வந்தனர். அவர்களில் கடைசி நபி, முகமது.
அவரது நோக்கத்தை நிறைவேற்றாமல் தடுக்க எதிரிகள் விரும்பினர். இதனால் எதிரிகள் போர் தொடுத்தனர். நபிகளும் அவரது தோழர்களும் இந்த போரில் ஈடுபட்டனர். போருக்கு செல்லும் முன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை நபிகள் வெளியிட்டார். ‘பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு அருகில் போர் நடக்கக் கூடாது. போர்க்களம் அருகே ஏதேனும் குடியிருப்புகள் இருந்தாலும் அங்கிருப்பவர்களை மாற்று இடங்களுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்’ என தோழர்களுக்கு நபிகள் உத்தரவிடுவார். போரில் நம்முடன் நேருக்கு நேர் மோதுபவர்களை மட்டுமே தாக்க வேண்டும். எதிரிகளின் கால்நடைகளைகூட கொல்லக் கூடாது என முகமது நபி அறிவித்தார். இதுதான் புனித போர். இந்த போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் ஷஹீத் (தியாகிகள்) ஆகிவிட்டதாக நபி தெரிவித்தார்.
அவர்கள் எந்த கேள்வி கணக்கும் இல்லாமல் சொர்க்கம் செல்வார்கள் என்ற உத்தரவாதத்தையும் அல்லா கொடுக்கிறான். போர் என வரும்போது ஒரு அப்பாவிகூட பலியாகக் கூடாது, எதிரி மட்டுமே நமது கண்ணுக்கு தெரிய வேண்டும். எதிரி நாட்டின் மீதுகூட சிறு தாக்குதலும் நடத்தக்கூடாது என முகமது நபி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதன்படியே அவரது படைகளும் நடந்து கொண்டன. இதுதான் நபி வழி. இதுதான் புனித போர். இஸ்லாம் கூறிய 5 கடமைகளில் முதலாவதான ஈமான் (இறைவன் ஒருவனே, முகமது அவரது தூதர்) எனும் கோட்பாட்டை நிலைநிறுத்தவே இந்த புனித போர் நடத்தப்பட்டது.
ஈமான்தான் இஸ்லாத்தின் ஆணிவேர். அது இல்லையென்றால் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. அப்படிப்பட்ட ஈமானின் கிளைகளாக பல செயல்களை
வகைப்படுத்தியுள்ளார் நபிகள். அதில் ஒன்றுதான் தான் சார்ந்த நாட்டின் மீது பற்று வைப்பது. தனது நாட்டுக்காக போரிடுவது. இந்த இரண்டுமே ஈமானின் ஒரு பகுதி என்கிறார் நபிகள். ஈமான் என்பது இறைவனுடன் மனிதனை நேரடியாக தொடர்புபடுத்தும் விஷயமாக இஸ்லாம் கூறியிருக்கிறது. அத்தகைய ஈமானின் ஒரு பகுதிதான் நாட்டுப் பற்று என நபிகள் கூறுவது, சந்தேக பார்வையுடையோர் சிந்திக்க வேண்டியது. இஸ்லாம்
சொல்லும் ஈமானின் இந்த கிளையை (நாட்டுப் பற்று) பற்றிக் கொண்டவர்களில் இந்திய முஸ்லிம்களுக்கு தனி இடம் உண்டு. இந்திய சுதந்திர போரில் அவர்களின் தியாக வரலாற்றை வைத்து இதை கூற முடியும். நாடு விடுதலை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் எல்லோருடனும் சேர்ந்து இந்த நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அப்படி போரிட்டவர்கள்கூட, எந்த நிலையிலும் போரில் சம்பந்தப்படாத அப்பாவிகள் தமது ஆயுதத்துக்கு பலியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
அன்று ஆதிக்க சக்திகள் இந்தியர்களை நசுக்கியதுபோல் இன்றும் உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோன்ற கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் மோத முடியாது என்கிற பட்சத்தில் அறவழியில் போராடுவதுதான் நிஜ புனித போராக இருக்க முடியும். அதுதான் நபி வழியும்கூட. அப்பாவிகள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக துப்பாக்கிகளை துறக்கலாம். இந்த தியாகமும் அல்லாவுக்கு பிடிக்கும்.
ஜியா உல் ஹக்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.