தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மூலம் பண்டைய தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டு சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள முடியும். தற்கால இளைய சமுதாயத்தினருக்கும், நகரங்களில் வாழும் மக்களுக்கும் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் தைப் பொங்கல் விளங்குகிறது. `பழையன கழிதலும், புதியன புகுதலும்‘ என்பதற்கேற்ப, குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில், வீடுகளில் உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையன்று போட்டு உடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால், மட்பாண்டங்களைச் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைப்பதுடன், வீடுகளிலும் புதிய பானைகளுடன் கூடிய நிலை உருவாகி, மனதிற்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாகவே மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனியான சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ருசித்தவர்கள் அறிவார்கள். பழைய விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் தொலைந்து, தைத்திங்கள் முதல் புதியவையாக நல்லவையாக நிகழவும், முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வரும் ஆண்டில் நிகழாமல் பொங்கிவரும் பால் போல, சர்க்கரைப் பொங்கலின் இனிப்பை போல சுவையாக இருக்கட்டும் என்பதே பொங்கலின் பாரம்பரிய தத்துவமாகும்.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே, பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து வந்துள்ளனர். தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகைகள் இருந்துள்ளன. இதனால் இந்த கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளன.
பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதானவர்கள் முதல் கைக்குழந்தைகள் வரை ஒரே ஊரில் ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டு, பொங்கலைக் கொண்டாடுவதை இன்றளவும் காண முடிகிறது. ஆனால், இன்று கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து, சிறு குடும்பங்கள் பெருகி விட்ட நிலையில், இன்றைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையின் சிறப்பு பற்றி தெரிவதில்லை. அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரகதியாகி விட்டன. மாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி இன்று டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.
அதிவேகமாக வளரும் காலத்திற்கு ஏற்ப விவசாய நிலங்களும், காடுகழனிகளும் இன்று வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகிறது. எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது பாதுகாத்து இளைய தலைமுறைக்கு தமிழர்களின் பண்பாடு குறித்து பண்டிகைகள் குறித்தும் எடுத்துரைப்போம் என இந்த தைத்திருநாளில் உறுதிமொழி ஏற்போம்.கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் உள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க மாட்டோம் என்ற உறுதியையும் ஏற்பதுடன், முந்தைய பசுமையான பொங்கல் நினைவுகளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணி பொங்கலைக் கொண்டாடுவோம்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.