தமிழகத்தைப் பொறுத்தவரை நவராத்திரி, புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது சாரதா நவராத்திரி எனப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின்போது மகாநவமி நாளன்று நாம் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம். ஆனால், வட மாநிலங்களில் மாக (மாசி) மாதம் (ஜனவரி-பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி நாளான வசந்த பஞ்சமியன்று சரஸ்வதி பூஜை மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியின் அவதார நாளாக இது கருதப்படுகிறது.
தமிழகத்தில் நவராத்திரியின்போது துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியையும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் அன்று மகாலட்சுமி பூஜையும், மகா நவராத்திரியின்போது துர்க்கா பூஜையும், வசந்த பஞ்சமி நாளன்று சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகின்றன. சரஸ்வதி தேவியின் அவதார நாளான இந்நாளில்தான் பிரம்மா சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன் மூலம் உலக மக்களுக்கு பேசும் சக்தியை அளித்ததாகப் புராணம் கூறுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி என்றும் சரஸ்வதி தேவி போற்றப்படுகிறாள்.
மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள். இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாவாள் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
பஞ்சாப், மேற்கு வங்கம், காஷ்மீர், அஸாம் ஆகிய மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி பூஜையை சிரத்தையாகக் கொண்டாடுகின்றனர். அந்நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. மக்களும் மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான். தேவிக்கு நிவேதனம் செய்யப்படும் இனிப்பு வகைகளும் மஞ்சள் நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன. மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டா அலங்கார ஆடைகளை பெண்கள் அணிவார்கள். எங்கு பார்த்தாலும் மங்களகரமான மஞ்சள் வண்ணம் கொலு வீற்றிருக்கும்.
வசந்த பஞ்சமி நாளன்று ஸ்ரீகிருஷ்ண பக்தியைப் பரப்பும் இஸ்கான் இயக்கத்தினரின் தலைமைப் பீடமான மேற்கு வங்கம் மாயாபூரில் உள்ள ராதா மாதவ் மந்திரில் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் அவரது எட்டு பட்ட மகிஷிகள் விக்கிரகங்களுக்கு மஞ்சள்பொடி பூசப்பட்டு, மஞ்சள் பட்டாடைகள் மஞ்சள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு கருவறை, மண்டபங்கள் அனைத்துமே கண்ணைக் கவரும் மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்கென்றே ஆயிரக்கணக்கான கிருஷ்ண பக்தர்கள் மாயாபூரில் இந்நாளில் கூடுகிறார்கள்.
இந்த வசந்த பஞ்சமியானது ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா-சரஸ்வதி ஆலயம், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் மற்றும் ஒரிஸா பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. வசந்த பஞ்சமி, வட மாநிலங்களில், ஒரு சமுதாய விழாவாகவே மாறிவிடுகிறது. வண்ண மயமான ஹோலிப் பண்டிகையை வரவேற்க கட்டியம் கூறும் இனிய விழாவாக இந்த வசந்த பஞ்சமி விளங்குகிறது. வசந்த பஞ்சமி கொண்டாட்டங்களில் வண்ண வண்ண பட்டங்களைப் பறக்க விடுவதும் கொண்டாட்டத்தின் ஓர் அம்சம்.
- விஜயலட்சுமி சுப்ரமணியம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.