(5.2.2026 முதல் 11.2.2026 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் ராசிக்கு கேந்திரத்தில் இருந்து ராசியைப் பார்ப்பது நல்ல அமைப்பு. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் கூட குறையும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அற்புதமாக அமர்ந்திருப்பதால் நிதிப் பிரச்னைகள் தலை தூக்காது. கையில் பணம் புரளும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விரைவில் செவ்வாய் மூன்றாம் இடத்திற்கு நகர இருக்கிறார். அப்பொழுது உங்கள் எண்ணங்கள் இன்னும் தெளிவாகவும் வலுவாகவும் இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் உண்டு. கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் சீராகும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கிரக அமைப்புகள் சாதகமாக இருக்கின்றன. பிள்ளைகளால் பெருமை உண்டு.
கவனம் தேவை: வரவு வந்தாலும் எச்சரிக்கையோடு செலவு செய்ய வேண்டும். சில நேரங்களில் எதற்கோ வைத்திருந்த பணத்தை தேவையற்ற விஷயங்களில் செலவு செய்து விடும் வாய்ப்பும் உண்டு. இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் சகோதரர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். திடீர் கோபத்தை விடுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீ ராமரை வணங்குங்கள்.


