பூரட்டாதி
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி இரண்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: குடும்பப்பாசம் மிகுந்தவரான பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் போன்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.
குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது.
பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
அரசியல்வாதிகளுக்கு தேவைகள் பூர்த்தியாகும்.
மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்