கடகம்
வெற்றிகளை நோக்கிப் பயணிக்கும் கடக ராசி அன்பர்களே!
கிரகநிலை: இதுவரை உங்களது பஞ்சம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து உங்களது தொழில் - அயன சயன போக ஸ்தானம் - தன வாக்கு குடும்ப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு அயன சயன போக ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி ரண ருண ரோக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் அனைத்துக் காரியங்களிலும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள். உங்களை இளைய சகோதர, சகோதரிகளுடன் இணைத்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும்.
உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமங்களாம்பிகாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
சிறப்பு பரிகாரம்: எலுமிச்சை மாலையை திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்.