விருச்சிகம்
உன்னதமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே!
கிரகநிலை: இதுவரை உங்களது ராசியில் இருந்த குருபகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக - அஷ்டம ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம்.
வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும்.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம். பலன் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோயிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் கார்த்திகேயாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 18 முறை சொல்லவும்.
சிறப்பு பரிகாரம்: சிவ அபிஷேகத்திற்கு எலுமிச்சைச் சாறு வழங்கவும். அனைத்து விதமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.