கடகம்
தொலை தூரச்சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுகவீடான 4ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், தாயாருடன் பகைமையையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் உங்களை புதிய பாதையில் பயணிக்க வைப்பார். உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும்.
குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வீடு கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் சந்தேகத்தாலும், சச்சரவுகளாலும் பேசாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இனி அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்து பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சஷ்டமபாக்யாதிபதியான குருபகவான் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். கல்யாணம் கூடி வரும். குடும்பத்தில் இருந்த சச்சரவு குறையும். வழக்கு சாதகமாகும். தந்தையார் ஆதரிப்பார். அவருக்கு இருந்த ஆரோக்யக் குறைவு சீராகும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சப்தஅஷ்டமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை சேவகாதிபதியும் விரயஸ்தானாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், கனவுத் தொல்லை, சளித் தொந்தரவு, கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். இளைய சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்:
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடி நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்கு கணிசமாக ஆதாயமுண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவு படுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் திட்டத்தை ஊக்குவிக்கும், உங்களை உற்சாகப்படுத்தும் பங்குதாரர் அறிமுகமாவார்.
உத்யோகத்தில் உங்களை எதிரியைப் போல பார்த்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. புது மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். சக ஊழியர்களை திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தோஷங்களால் தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நட்பு விலகும்.
மாணவ மாணவிகளே! நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கியிருந்த படம் ரிலீஸாகும். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளே! தலைமையே வியந்து பாராட்டுமளவிற்கு உங்களுடைய களப்பணி சிறப்பாக இருக்கும். பொது மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும்.
விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். கடன் தீரும். இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும், வசதி, வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
நாமக்கல் மாவட்டம் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வணங்குங்கள்.