கன்னி
கனவிலும், கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவிற்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக் கொடுக்கும் மனது கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.
வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது தவறாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சுகசப்தமாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள், பிரேக் எல்லாம் சரி பார்த்துச் செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டமாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.
பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சொந்த பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் பயனடைவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசியாதிபதியும்ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகு, அறிவு கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் குடிகொள்ளும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். பெரிய பதவியில் இருக்கும் உங்களுடைய பழைய நண்பரால் ஆதாயமடைவீர்கள்.
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 4ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். ஒருவித படபடப்பு, ஹார்மோன் பிரச்னை, ஈகோவால் கணவன்மனைவிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.
வியாபாரிகளே! சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டிட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலமாக குடைச்சல்கள் இருக்கும்.
உத்யோகஸ்தர்களே! சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தேர்வில் வெற்றி பெற்று உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.
கன்னிப்பெண்களே! சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவீர்கள்.
மாணவ மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில் எதிர்பார்த்த நிறுவனத்தில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள்.
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! தொகுதியிலே செல்வாக்கு கூடும். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கௌரவப் பதவி உண்டு. வழக்குகளை சந்திக்க நேரிடும். சகாக்களை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள். கட்சி மேலிடம் உங்களை மதிக்கும்.
விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம்பக்கம் நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். மரப்பயிர் லாபம் தரும். இந்த குரு மாற்றம் ஏமாற்றங்களையும், எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியை தரும்.
பரிகாரம்:
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் அருட்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரியை செவ்வாய்க் கிழமைகளில் சென்று வணங்குங்கள்.