மேஷம்
அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்தில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். இத்தனை நாட்களாக கண்டு வந்த சிரமம் குறைவதோடு குருவின் பார்வை பலத்தோடு வெற்றி நடை போட உள்ளீர்கள். ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் என்பதால் நன்மை தரும் பலன்களையே அனுபவிக்க உள்ளீர்கள். அடுத்து வரும் ஒரு வருட காலமும் நிதி நிலை எந்தவித சிரமமுமின்றி சீராகச் செல்லும். செலவுகள் உண்டானாலும் அது குடும்பத்தில் உண்டாகும் சுபநிகழ்ச்சிகளைப் பொறுத்தே அமையும். மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் குடிபுகும். குருவின் பார்வை பலத்தினால் திருமணம், சொந்தவீடு வாங்குவது, புத்திரபாக்கியம் போன்ற நிகழ்வுகளை வீட்டினில் எதிர்பார்க்கலாம். கடன்பிரச்னைகள் குறையத் தொடங்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி அவர்களுக்குத் தேவையான உதவியினை செய்வீர்கள். நிலுவையில் இருந்து வரும் வழக்கு விவகாரங்கள் குருவின் பார்வையால் முடிவிற்கு வரும். உடல் ஆரோக்யம் சீரடையும். தம்பதியருக்கிடையே அன்யோன்யம் கூடும். குருவுடன் சனி இருந்தாலும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் எந்தப் பிரச்னையும் உண்டாகாது. மேலும் ராகு:கேதுவின் சஞ்சார நிலையும் சாதகமாக உள்ளதால் மேஷ ராசிக்காரர்கள் வருகின்ற ஒரு வருட காலத்தை குருவின் திருவருளால் மனநிம்மதியுடன் கழிக்கலாம்.
மாணவர்கள் : கல்விநிலையில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கி படிப்பினில் நாட்டம் கொள்வீர்கள். அரசுத் தரப்பில் இருந்து கல்வி உதவித்தொகை கிடைக்கும். அந்நிய தேசம் சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடிவரும். நன்றாகப் படிக்கும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் உங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். ஆசிரியர்களின் உதவியும், பெருமுயற்சியும் உங்களுக்கான வளர்ச்சிப்பாதையை வகுத்துத் தரும். குருவின் அருளால் இந்த ஒரு வருட காலம் உங்கள் எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பெண்கள் : குடும்பத்தில் உங்களுக்கான பொறுப்புகள் உயரும். கணவர், குழந்தைகளின் வளர்ச்சி என்பது உங்கள் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எந்த ஒரு விஷயத்தையும் மேம்போக்காக பார்க்காமல் அதனால் உண்டாகும் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். பொறுப்புகள் உயர்ந்தாலும் அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குருவின் பார்வை பலம் துணையிருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் குடும்பத்தை முன்னேற்றப் பாதையில்தான் அழைத்துச் செல்லும்.
உத்யோகம் மற்றும் தொழில்நிலை : ஜீவன ஸ்தான அதிபதி சனியுடன் குரு இணைவதால் உத்யோகத்தில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உயரதிகாரிகளின் ஆதரவினையும் பெறுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரக் காண்பீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டு குரு உத்யோக ரீதியாக வெளிநாடு மற்றும் தொலைதூரப் பிரயாணத்தினைத் தருவார். இதுபோன்ற வாய்ப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு இருந்து வந்த நிதி நெருக்கடி வருகின்ற மார்ச் மாதம் முதல் சீரடையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெறும். விவசாயம் செய்வோருக்கு அரசு தரப்பில் இருந்து உதவிகள் கிட்டும். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்கள் வளர்ச்சி பெறும். அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். தொண்டர்கள் தங்கள் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு வந்து சேரும். பொதுவாக இந்த ஒரு வருட காலமும் தொழில்நிலை என்பது அபார வளர்ச்சியினைக் காணும்.
பொதுவான நிலை : பொதுவாக இந்த ஒரு வருட காலமும் குருவின் பார்வையினால் நற்பலனே நடைபெறும். நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுகிறது என்கிற மமதையில் இருக்காமல் எதிர்காலம் கருதி சேமிப்பில் ஈடுபட வேண்டியது அவசியம். நல்ல நேரம் நடக்கிறது என்பதற்காக அகலக்கால் வைத்துவிடாதீர்கள்.
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது ஷீரடி சென்று சாயிநாத ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வினில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் நீடித்திருக்கும்.