கும்பம்
வெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு குரு பகவான் வரவிருப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இறங்கிய காரியங்களில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிகத் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். அதிலும் 11ல் குரு-சனி-கேது ஆகியோரின் இணைவு நீங்கள் எதிர்பாராத வகையில் நற்பலன்களைத் தரவல்லது. இதுநாள் வரை கண்டு வந்த சிரமங்கள் வெகுவாகக் குறைந்திடக் காண்பீர்கள். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் இது வரை குரு பகவான் சஞ்சரித்ததால் உங்களது உண்மையான உழைப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளீர்கள். இப்பொழுது அவர் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கு வர உள்ளார். லாபத்தினைத் தரும் 11ம் இடத்தில் அமர்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். இதுநாள் வரை சிரமத்தினை சந்தித்து வந்த நீங்கள் அதற்கான தனலாபத்தை அடைய உள்ளீர்கள். உண்மையாக உழைத்ததற்கான பலன் தற்போது கிட்டும். மேலும் 11ம் இடம் என்பது வெற்றியைக் குறிக்கும் இடம் என்பதால் நினைத்த காரியம் ஜெயமாகும். நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான பலமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்துவதால் வெற்றி என்பது உறுதியாகிறது. ஒவ்வொரு செயலிலும் தனிப்பட்ட முறையில் உங்கள் முத்திரையை பதித்து வருவீர்கள். தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள்.
மாணவர்கள்: மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவு முற்றிலும் அகலும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் கும்ப ராசி மாணவர்கள் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்ஸி, கணிதம், மொழிப்பிரிவு துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் உதவித்தொகையுடன் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.
பெண்கள்: குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளியிலான பொருட்கள் சேரும். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அடுத்த வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதில் மன நிம்மதி உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் பணிகளுக்கு அவ்வப்போது தக்க ஆலோசனை வழங்குவீர்கள். பிள்ளைகளின் வழியில் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். பெரிய பொறுப்புகளை முழு மனதோடு செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.
தொழில், உத்யோகம் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளை பதவியும் பட்டமும் தேடி வரும் நேரம் இது. ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயிகள் அரசுத்தரப்பிலிருந்து விருது பெறும் அளவிற்கு உயர்வு காண்பார்கள்.
பொதுவான நிலை : பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான திசை புக்தியைக் கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். இந்த குருபெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களைத் தருகிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
பரிகாரம் : குருபெயர்ச்சி நாளில் அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் கோபூஜை செய்து வழிபடுவதும் சகல ஐஸ்வரியங்களையும் தரும். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்குச் சென்று ரங்கநாதரை தரிசிக்க மனதில் சந்தோஷம் நீடித்திருக்கும்.