மீனம்
வரவிருக்கும் குருப்பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களைப் பொறுத்த வரை தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத் தரும். பத்தாம் இடத்து குரு பதவியைப் பறிப்பார் என்ற பழமொழி உங்களுக்குப் பொருந்தாது. உங்கள் ராசியின் அதிபதி ஆகிய குரு பகவான் பத்தில் ஆட்சி பெறுவதால் தொழில் ரீதியாக அதிக அலைச்சலைத் தருவாரே தவிர பதவியைப் பறிக்கமாட்டார். சிரமப்படுவதற்கான நற்பலனையும் குரு பகவான் அளிப்பார். உங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான உழைப்பினால் நற்பெயரோடு புகழையும் அடைவீர்கள். ஆனால் எதிர்பார்க்கும் தன லாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்புகள் உயரத் துவங்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உங்கள் பொறுப்புகள் கூடும். பொறுப்புகள் கூடினாலும் மிகுந்த ஈடுபாட்டோடு பணி செய்வதில் பூரண திருப்தி அடைவீர்கள். மதியூகம் நிறைந்த உங்கள் வார்த்தைகள் மிகுந்த மதிப்பினைப் பெறும். ஆதாரத்துடன் நீங்கள் பேசும் வார்த்தைகள் எதிராளியை கலங்கடிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். மாற்று மதத்தினருடன் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அவ்வப்போது பழுதடைந்து சிரமத்தினைத் தரலாம். ஜென்ம ராசியின் மீது இருந்து வந்த குரு பகவானின் பார்வை அகலுவதால் செயல்களில் சற்று நிதானம் தேவை. சுகஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டின் மீது குருபகவானின் நேரடிப்பார்வை விழுவதால் வீடு, வண்டி, வாகனம், மனை ஆகியன சேரும். குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். தாயார் வழி உறவினர்களுக்கு அவ்வப்போது உதவி செய்ய வேண்டியிருக்கும்.
மாணவர்கள்: வித்யா ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் தங்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். குரு பகவானின் அருளால் ஏழரைச் சனியின் தாக்கம் குறையும். செய்முறைத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் நீங்கள் எழுத்துத் தேர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும். மெரைன் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள்: குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பீர்கள். வேலைப்பளுவின் காரணமாக நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். முன்பின் தெரியாத பெண்களின் இணைவு எதிர்பாராத பிரச்னையைத் தரக்கூடும். ஏமாற்றுக்கார பெண்களின் பிடியில் சிக்கி பொருளிழப்பு உண்டாகலாம். கணவரின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.
தொழில், உத்யோகம் : உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் பணி செய்வோர் பணத்தைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. கள்ளநோட்டுகளைக் கண்டறிவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை குருபகவான் நிச்சயம் பெற்றுத் தருவார். செல்வச் சேர்க்கையில் சிறிதும் குறைவு உண்டாகாது. ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு குரு அமர்வதால் வாழ்வியல் தரம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். உணவுப் பொருட்கள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர்.
பொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சியினால் உங்கள் உழைக்கும் திறன் உயர்வடையும். வரும் ஒரு வருட காலத்திற்குள் சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து ஒரு படி உயரும் என்பது உறுதி. திட்டமிட்டு செலவு செய்தால் வருமானம் மிச்சமாகும். ஒரு சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதி தந்துவிட்டு அதனைக் காப்பாற்றுவதில் கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம். கவனத்துடன் பேசுங்கள். கவலையின்றி வாழுங்கள்.
பரிகாரம்: பிரதி பௌர்ணமி நாளில் அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள். வீட்டினில் விசேஷமாக பௌர்ணமி பூஜை செய்து பரமேஸ்வரனை வழிபடுவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட வாழ்வினில் முன்னேற்றம் காண்பீர்கள்.