ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமத்துச் சனியோடு குருவும் இணைவதை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எட்டாம் வீட்டு குரு சற்று சிரமத்தைத் தருவார் என்றாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அதிபதியே குரு பகவான் என்பதால் நற்பலன்களே கிட்டும். அஷ்டமத்துச் சனியினால் உண்டாகும் கஷ்டங்கள் குறையத் தொடங்கும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையத் தொடங்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். குறிப்பாக குழந்தைகளின் கல்வி நிலை, திருமண விவகாரங்கள், புதிய சொத்து வாங்குதல் போன்ற முக்கியமான விவகாரங்களில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு செயல்பட்டால் இவை அனைத்திலும் ஏமாற்றம் உண்டாகலாம். உதாரணத்திற்கு பிள்ளையின் உயர்கல்விக்காக கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமும், எச்சரிக்கையும் அவசியம் தேவை. இதேபோன்று பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுதல் அல்லது பிள்ளைக்கு பெண் தேடுதலிலும் மிகுந்த நிதானத்துடன் செயல்படுங்கள். சொத்து வாங்கும்போது அதில் இருக்கும் வில்லங்கங்களில் கவனம் செலுத்துங்கள். செலவுகள் அதிகமானாலும் அதற்கேற்ற வருமானத்தையும் காண்பீர்கள். எளிதில் முடிந்துவிடும் என்று அலட்சியமாக இருக்கும் விவகாரங்களில் பெரிய தடைகளைக் காண நேரிடும். விடாமுயற்சி ஒன்றே வெற்றியைத் தரும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
மாணவர்கள் : அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களின் முயற்சிகளில் தடை உண்டாகும். நண்பர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டியது நல்லது. வீண்பழியால் எதிர்கால வளர்ச்சியில் தடை உண்டாகலாம் என்பதை நினைவில் கொண்டு தேர்வு நேரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு செல்வதற்கு முன்பாக பெற்றோர்களின் ஆசி பெற்றுச் செல்வது நல்லது.
பெண்கள் : எந்த ஒரு விவகாரத்தையும் தீர்க்க தனித்துச் செயல்படாதீர்கள். கணவருடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இக்கட்டான சூழலில் சரியான முடிவெடுக்க இயலாது தடுமாறுவீர்கள். அநாவசியமான செலவுகள் அதிகரிக்கும். குறைந்த விலையுள்ள தரமற்ற பொருளை தரமானது என்று நம்பி அதிக விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு ஆளாவீர்கள். பணம் சார்ந்த விவகாரங்களில் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டியது அவசியம். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை உங்கள் வெற்றிக்குத் துணைபுரியும். கணவருடன் வீண்வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் மனதளவில் பெரிய விரிசல் உண்டாகிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
உத்யோகம் மற்றும் தொழில் நிலை: அஷ்டமத்துச்சனியால் உண்டாகும் தடைகள் ஓரளவிற்குக் குறைந்தாலும் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது. கீழ்நிலைப் பணியாளர்கள் செய்யும் தவறினை உடனடியாக மேலதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது. இதுநாள் வரை உங்களைத் தவறாக எண்ணியிருந்த உயரதிகாரிகள் தற்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இருந்தாலும் உடனிருப்போரின் பொறாமை குணத்தினால் ஒரு சில பழிகளை சுமக்க நேரிடும். குரு-சனியின் சேர்க்கை அத்தனை உசிதமில்லை என்றாலும் தனுசு ராசியில் குருபகவானின் பலம் கூடுவதால் சிரமம் அதிகம் இருக்காது என்று நம்பலாம். ஒரு சிலர் பணியிடமாற்றத்தினால் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க நேரிடும். அது போன்ற நேரத்தில் நேரத்தினை உணர்ந்துகொண்டு நிர்வாகத்தோடு ஒத்துழைப்பது நல்லது. ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பணியிழப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பணிபுரிவோர் சென்ட்டிமெண்ட் உணர்வுகளால் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் கூடும். விவசாயத்தொழில் செய்வோர் அரசுத்தரப்பு மானியம் கிடைக்க அதிகம் அலைய வேண்டியிருக்கும்.
பொதுவான நிலை : பொதுவாக அஷ்டமத்துச் சனியினால் உண்டாகும் பிரச்னைகளை குறைக்கும் வண்ணம் இந்த குரு பெயர்ச்சி அமைந்தாலும் உடனடி நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. அதிர்ஷ்டக்காற்று என்பது இல்லாததால் நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து உள்ளதைத் தக்கவைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று சந்நதியை ஆறுமுறை வலம் வந்து வணங்குங்கள். நேரம் கிடைக்கும்போது சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கண்மலர் காணிக்கை செலுத்தி வணங்க அம்பிகையின் அருட்பார்வையினால் கஷ்டங்கள் நீங்கக் காண்பீர்கள்.