மிதுனம்
கண்டகச்சனியால் உண்டான கஷ்டங்கள் வெகுவாகக் குறையக் காண்பீர்கள். குருபகவானின் நேரடிப்பார்வை உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செயல்வேகத்தினைக் கூட்டுவார். ராகுவின் வேகத்தோடு குருவின் பார்வை பலமும் இணைவதால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இயற்கையில் புத்திசாதுர்யம் நிறைந்தவர் என்பதால் எத்தகைய சூழலிலும் வெற்றி பெற்றுவருவீர்கள். குருவின் பார்வை பலம் இதுநாள் வரை உண்டான தடைகளை தகர்த்தெறியும். நீண்டநாட்களாக சரியாக முடிவெடுக்க இயலாமல் தவித்து வந்த விவகாரங்களில் தடாலடியாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். தடைபட்டு வந்த பணவரவு வந்து சேரும். எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சொந்தவீடு வாங்கும் கனவில் உள்ளவர்களுக்கு நேரம் சாதகமாக அமையும். ஏழாம் வீட்டு குரு பகவான் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்தை அதிகரிக்கச் செய்வார். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை கொள்வீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் பணிகளுக்குத் தேவையான வகையில் பொருள்வரவு அதிகரிக்கும். வருகின்ற ஒரு வருட காலமும் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
மாணவர்கள்: குருவின் ஆதரவினால் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். இதுநாள் வரை மனதில் இருந்து வந்த சோம்பல்தன்மை நீங்கும். எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு உண்டாகும். குறிப்பாக உயர்கல்வியில் உங்களுடைய துறையை சரியாகத் தேர்ந்தெடுத்து படித்துப் பயன்பெறுவீர்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால நேரம் சாதகமாக அமையும். ஏற்கெனவே அயல்நாட்டில் படித்து வரும் மாணவர்கள் அங்கேயே தங்களுக்கான பணியினைத் தேடிக்கொள்வார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் மிதுன ராசி மாணவர்களுக்கு நிச்சயமாக வேலை கிடைத்துவிடும்.
பெண்கள்: திருமணத்தடை கண்டு வந்த பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த வரன் வந்து சேரக் காண்பர். கணவருடன் இணைந்து குடும்பத்தினை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வீர்கள். சதா உழைத்து வரும் நீங்கள் நேரத்திற்கு உணவருந்த வேண்டியது அவசியம். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் மதிப்புயரக் காண்பர். குறிப்பாக மிதுனராசியைச் சேர்ந்த பெண்கள் இந்த ஒரு வருட காலத்தில் தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெறுவார்கள்.
உத்யோகம் மற்றும் தொழில்நிலை: ஏழாம் வீட்டுச் சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு குருவின் பார்வை பலம் வலுவான நம்பிக்கையை உண்டாக்கும். உங்களை பாதித்து வந்த நிகழ்வுகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களைச் சுற்றி வந்த வீண்பழி அகலும். மேலதிகாரியின் ஆதரவினால் பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஆகியவற்றைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் மீதான கறைகள் நீங்கக் காண்பார்கள். நீண்டகாலமாக அந்நிய தேசத்தில் பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினரையும் தங்களுடன் அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி காண்பர். விவசாயிகள் செழிப்பான நிலையினை அடைவார்கள். குறிப்பாக கால்நடை வளர்ப்பில் இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணப்பயிர்கள் நல்ல ஆதாயத்தினைத் தரும். சிறு மற்றும் குறுதொழில் செய்வோர் அபாரமாக வளர்ச்சி பெறுவர். தொழில்முறையில் விருது பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
பொதுவான நிலை: விடாமுயற்சியும், புத்தி சாதுர்யமும் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் உடல் ஆரோக்யத்தில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அலட்சிய போக்கினால் ஆரோக்யத்தில் ஒரு சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அதே போல முக்கியமான விவகாரங்களில் உண்டாகும் சிறு சிறு பிழைகளைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அதனை சரிசெய்ய முயற்சியுங்கள். மற்றபடி இந்த ஒரு வருட காலமும் மிதுன ராசிக்காரர்களுக்கு வெகுவான வளர்ச்சியைத்தான் தந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம்: தினந்தோறும் கந்த சஷ்டி கவசத்தினை படித்து வருவது நல்லது. இயலாதவர்கள் அதனை ஒலிபெருக்கியில் ஓடவிட்டு காதால் கேட்பதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருச்செந்தூர் திருத்தலத்திற்குச் சென்று செந்தில்ஆண்டவனை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் விருப்பங்கள் எந்தவிதமான தடையுமின்றி நிறைவேறும்.