கடகம்
கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத்தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குருபகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு வர உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் தனவரவு என்பது தொடரும். ஆயினும் கடன்பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேசும் வார்த்தைகளில் இனிமையை உணர்வீர்கள். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். முக்கியமான பிரச்னைகளில் உங்களின் ஆலோசனையை நாடி வருவோரின் எண்ணிக்கை உயரும். உறவினர்களோடு விரோதம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் சற்று விலகியிருப்பதே நல்லது. தேவையற்ற விவாதங்கள் வீண் மனஸ்தாபத்தினைத் தோற்றுவிக்கலாம். வீண்வம்பு, வழக்கு வந்து சேரக்கூடும். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொலைதூரப் பிரயாணங்களின் போது தக்க பாதுகாப்புடனும், மிகுந்த கவனத்துடனும் பயணிக்க வேண்டியது கட்டாயமாகிறது. வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். அளவுக்கதிகமான டென்ஷனாலும், ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவதாலும் உடல்நிலையில் அசதி காண நேரிடலாம். ஆறாம் இடத்தில் உச்ச பலத்துடன் அமருகின்ற குரு பகவான் நீண்டநாள் வியாதிகளைக் குணப்படுத்துவார். அதே நேரத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளைத் தற்போது செய்வது நல்லதல்ல. வரும் ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு பணியிலும் மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் ஈடுபட வேண்டியிருக்கும்.
மாணவர்கள்: தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். கேள்விக்குரிய சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உண்டாகும். இதனைத் தவிர்க்க தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. ஞாபக மறதித் தொந்தரவால் சற்று சிரமப்படுவீர்கள். இன்ஜினியரிங் சார்ந்த அனைத்துத் துறை மாணவர்களும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள்: உங்கள் பேச்சுத்திறமையின் மூலம் நல்ல நண்பர்களை பெற்றிருக்கும் நீங்கள் அதே பேச்சின் மூலம் அவர்களோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடலாம். குடும்பப் பெரியவர்களோடு அனுசரணையான அணுகுமுறை தேவை. அநாவசியமான சந்தேகத்தின் காரணமாக நீங்கள் பேசும் வார்த்தைகள் நெருங்கிய உறவினர்களோடும், நண்பர்களோடும் கருத்து வேறுபாடு கொள்ளச் செய்யும். பெண்களைப் பொறுத்தவரை மனத்தெளிவுடன் செயல்படவேண்டும் என்பது அவசியமாகிறது.
தொழில், உத்யோகம்: தவறான தகவல் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கு அவப்பெயர் தோன்றலாம். உத்யோகத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. காவல்துறை, ராணுவம், தொழிற்சாலைப் பணியாளர்கள், போக்குவரத்துத்துறை, மருத்துவம், நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் தங்கள் பணிகளில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் தொழில் ரீதியாக பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. விவசாயிகள் அரசுத்தரப்பில் இருந்து கடனுதவி கிடைக்கக் காண்பார்கள். டிராக்டர், அறுவடை இயந்திரம் முதலானவற்றை வாங்குவதற்கு கால நேரம் கூடி வரும். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.
பொதுவான நிலை: பொதுவாக வருகின்ற ஒரு வருட காலம் உங்களுக்கு சற்று சோதனைக் காலமாக அமையலாம். வீண் கற்பனைகளால் இனம்புரியாத பயம் ஒன்று மனதில் இடம் பெறும். எது ஒன்றையும் முழுமையாக நம்பியும், நம்பாலும் என இரட்டை மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். தெய்வ நம்பிக்கையின் மூலம் மனத்தெளிவு காண முற்படுங்கள்.
பரிகாரம்: ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருமலை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வினில் முன்னேற்றம் தருகின்ற திருப்புமுனையைக் காண்பீர்கள்.