சிம்மம்
குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். குருபகவான் ஐந்தில் சென்று அமர்வதால் வரும் ஒரு வருட காலத்திற்குள் நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். மனதில் சந்தோஷம் குடிபுகும். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகளைச் சந்திப்பீர்கள். ஐந்தாம் இடத்தில் அமரும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும். மனதில் சாந்தமும், வாழ்வினில் நிம்மதியும் காண்பீர்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அ க்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுநாள் வரை விலகியிருந்த சொந்தம் ஒன்று உங்கள் பந்தத்தை நாடி வரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த நேரத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போருக்கு குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
மாணவர்கள்: தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், இரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். அலட்சியத்தின் காரணமாக மதிப்பெண்களைக் கோட்டைவிடும் வாய்ப்பு உண்டு. மொழிப்பிரிவு பாடங்களில் சிறப்பு கவனம் தேவை. உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள் பக்கபலமாய்த் துணையிருப்பார்கள்.
பெண்கள் : இயற்கையில் வலிமையான மனம் கொண்ட நீங்கள் குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்தையும் கணவரின் மற்றும் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும்.
தொழில் , உத்யோகம் , உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். முன்னேற்றம் கருதி இடமாற்றத்தினை ஏற்றுக் கொள்வது நல்லது. அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் சிறப்பான லாபத்தினைக் காண்பர். விவசாயிகள் கால்நடை வளர்ப்பினில் நல்லதொரு வளர்ச்சியை காண்பார்கள். பணப்பயிர்கள் செழித்து வளர்ந்து வருமானத்தைப் பெருக்கும். தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பொதுவான நிலை : பொதுவாக வரும் ஒரு வருட காலத்திற்கு குருபகவானின் பார்வை ஜென்ம ராசியின் மீது நீடிப்பதால் எந்தவிதமான கவலையும் இன்றி உங்களால் சுதந்திரமாகச் செயல்பட இயலும். ஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் உங்களது வெற்றியை உறுதி செய்கிறார். அதே நேரத்தில் தேவையற்ற கற்பனைகளால் உண்டாகும் கவலையைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கூடா நட்பு கேடில் விளையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பரிகாரம்: தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஞாயிறு தோறும் ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதோ அல்லது சூரியனுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வணங்குவதும் நல்லது. ஞாயிறுதோறும் சரபேஸ்வரர் வழிபாடும் வெற்றியைத் தரும். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட தொடர்வெற்றி என்பது சாத்தியமாகும்.