கன்னி
கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் அவரது அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். அதே நேரத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சுபகாரியங்களை நடத்துவதில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையத் துவங்கும். பொருள் சேமிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது. ஜனன ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சூரியன் வலுவாக இருக்கப் பிறந்தவர்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலும். நான்காம் இடத்து குருவினால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்து விளங்கும். தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். சதா உங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். குடும்பத்தில் செல்வமும், சுகமும் நிறைந்து விளங்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயர்வதோடு அதிகாரமும் செல்லுபடியாகும். வண்டி, வாகனங்கள் சேரும். இன்னும் ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது திடீர் பிரயாணங்கள் செய்ய நேரிட்டாலும் நல்ல வாகன சுகம் உண்டு. தொழில்முறைப் பிரயாணத்தின் போதும் ஆன்மிகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். விரய ஸ்தானம் ஆகிய எட்டாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை சுபசெலவுகளை உண்டாக்கும். தாயார் வழி சொத்துக்கள் வந்து சேரும் நேரம் இது. அதே நேரத்தில் அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாணவர்கள் : குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.
பெண்கள்: குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிவிடுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கணவரின் பணிகளுக்கு உங்களது ஆலோசனைகள் அவ்வப்போது தேவைப்படும். குழப்பம் தரும் விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை புதன்கிழமையில் எடுப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவும்.
தொழில் , உத்யோகம்: ஜீவனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். உயரதிகாரிகளின் வழியில் தொல்லைகளுக்கு ஆளாகி வந்த உங்களுக்கு தற்போது விடிவுகாலம் பிறந்துவிட்டது. தனியார்துறையில் பணியாற்றுபவர்கள் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, சமையல் கலை ஆகியவை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். அரசியல்வாதிகள் தங்களுக்கு உரிய இடத்தினை நிர்ணயம் செய்துகொள்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் உயர்வு காணும். தண்ணீர் பற்றாக்குறை தீரும். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை குருபகவான் நிச்சயம் தருவார்.
பொதுவான நிலை: பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களை ஓய்வாக அமர்ந்திருக்க விடாது. தொழில்முறையில் ஓய்வின்றி உழைப்பதும், அதிகப்படியான அலைச்சலும் சதா இருந்துகொண்டிருக்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் சேரும். நிலுவையில் இருந்து கடன்பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் உங்களது வருமானத்தை குருபகவான் உயர்த்துவார் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம்: அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்து வருவது நல்ல பனைத் தரும். அங்காள பரமேஸ்வரி வழிபாடும் நல்லது. நேரம் கிடைக்கும்போது மேல்மலையனூர் திருத்தலத்திற்குச் சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதால் வாழ்வினில் வளம் பெறுவீர்கள்.