துலாம்
கடந்த ஒரு வருட காலமாக சிறப்பான நற்பலன்களைக் கண்டு வந்த நீங்கள் தற்போது நடைபெற உள்ள குருபெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர் இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ஒருவித ஐயப்பாட்டோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது வாழ்க்கைத் துணையையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் நீங்கள் நேரடியாக தலையிடாமல் அவரது துணையுடன் செயல்பட்டால் பிரச்னைகள் விரைவில் தீர்வு காணும். சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணையும் நேரம் இது. இக்கட்டான சூழலில் நேரத்தினை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. அடுத்தவர்களின் செயல்களைப் பொறுப்பேற்றுச் செய்து கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் ஞாபகமறதித் தொந்தரவில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பணிகளை எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.
மாணவர்கள்: மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சிறப்பாக அமையும். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடைபெறும் உடல் ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் துலாம் ராசி மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள். ஏரோநாட்டிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் அறிவியல்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.
பெண்கள்: அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாகி வருவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். குடும்பப் பெரியவர்களுக்கு சேவை செய்வதில் மனதிருப்தி காண்பீர்கள். அக்கம்பக்கத்து பெண்டிரோடு கொண்டிருக்கும் சுமுக உறவு தக்க சமயத்தில் உதவியாய் அமையும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிக எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது அவசியம்.
தொழில், உத்யோகம் : கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றாமல் இருக்க கணக்கு வழக்குகளை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் குறைந்து வருவதாக உணர்வார்கள். விவசாயிகள் கால்நடைகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. விளைச்சலை குறித்த நேரத்தில் அறுவடை செய்துவிட வேண்டும். ஒருநாள் தாமதித்தாலும் எதிர்பாராத வகையில் நஷ்டத்தினை சந்திக்க நேரும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது அவசியம். லேடி டாக்டர்கள் சாதனை படைப்பார்கள். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டுச் செல்வதோ, அல்லது அடுத்தவர்களின் வேலையை கூடுதலாகச் சுமப்பதோ கூடாது. பிறர் செய்யும் தவறு தொழில் முறையில் உங்களுக்கு பாதிப்பினைத் தோற்றுவிக்கலாம். மேலதிகாரிகள் செய்யும் தவறு உங்கள் மனதினை உறுத்தும். அரசுப்பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கத்தினை அடைவார்கள். புதிதாக வேலைக்கு முயற்சிப்போர் மிகுந்த சிரமத்தினை சந்திப்பார்கள்.
பொதுவான நிலை: உங்கள் பெயரை உபயோகப்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பலனை அனுபவித்துவிடுவார்கள். உங்களது இயற்கை குணமான செயல்வேகமும் சுறுசுறுப்பும் சற்று குறையும். அனுபவ அறிவினைப் பெறுவதால் அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள். பொதுவாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதை இந்த குருபெயர்ச்சி வலியுறுத்திச் சொல்கிறது.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு உங்கள் குறைகளைப் போக்கிடும். தினமும் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து குலதெய்வத்தினை மனதில் தியானித்து பிரார்த்தனை செய்து வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது வேலூர்மாவட்டம், போளூரை அடுத்து உள்ள படைவீடு திருத்தலத்திற்குச் சென்று ரேணுகா பரமேஸ்வரி அம்மனை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அம்மனின் அருளால் குறைகள் நீங்கி நலமுடன் வாழ்வீர்கள்.