தனுசு
‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்ற பழமொழி தனுசுராசிக்காரர்களுக்குப் பொருந்தாது. உங்கள் ராசியில் குருபகவான் ஆட்சிபலம் பெற்று சொந்த வீட்டில் அமர்வதால் இடப்பெயர்ச்சி என்ற பேச்சிற்கு இடமில்லாமல் போகிறது. மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு வழிகளைப் பின்பற்ற மனம் ஒப்பாது என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண்பீர்கள். குருவின் ஆட்சி பலத்தால் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது நடக்கும். ஆயினும் ஜென்ம குருவினால் உண்டாகும் மன சஞ்சலம் இருந்து வருவதைத் தவிர்க்க இயலாது. கோயில்களுக்குச் செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் மனதில் திருப்தி காண இயலும். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு வந்து சேரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள். குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குருபலமும் வந்து சேர்கிறது. இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்ர காரகனான குருவின் அருட்பார்வை ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் நெடுநாட்களாக பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு குருவின் இந்த ஒரு வருட சஞ்சாரத்திற்குள் நல்ல வரன் அமையும். நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்னும் பழமொழியை மனதில் கொண்டு பிரச்னைக்குரிய மனிதர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. 2019ம் ஆண்டின் இறுதியில் தொலைதூரப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் அனுகூலத்தினைத் தரும். கடன் பிரச்சினைகள் தீர்வடையும். வழக்கு வியாஜ்ஜியங்கள் விரைவாக முடிவிற்கு வரும். உங்களை இதுநாள் வரை எதிரியாக எண்ணியவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி வருவார்கள்.
மாணவர்கள்: மாணவர்களைப் பொறுத்த வரை கிரஹ சஞ்சார நிலை சிறப்பாக உள்ளது. ஞாபகமறதி முற்றிலும் காணாமல் போகும். பாடங்களை வேகமாகப் படித்து முடித்துவிடுவீர்கள். அதே நேரத்தில் அவசரத்தை கைவிட்டு கேட்கப்படும் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் துணையோடு தனுசு ராசி மாணவர்கள் கல்வியில் முதன்மை பெறுவர்.
பெண்கள்: பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு அவற்றின் உபயோகம் குறித்து தோழியர் மத்தியிலும் விவரிப்பீர்கள். கணவர் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாய் இருப்பார். அவரது நண்பர்களில் நல்லவர், தீயவரைப் பிரித்தறிந்து தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையைச் சொல்வீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் இவ்வருடத்தில் உண்டாகும். குடும்ப விசேஷங்களில் உறவினர்களை அதிகம் நம்பாது தனித்து செயல்படுவீர்கள்.
தொழில், உத்யோகம்: அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனி வட்டத்தை உருவாக்குவதாக நினைக்கும் மேலதிகாரியோடு மோதல்போக்கு உண்டாகலாம். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பளத்தில் உயர்வு ஆகியவை அவரால் தடைபடுவதாக உணர்வீர்கள். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத் தொழில் செய்பவர்கள், ஜவுளி, வாசனாதி திரவியங்கள், ஃபேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டுகள் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கூடினாலும் லாபம் கிட்டும். அதே நேரத்தில் பழைய வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்து உங்கள் வளர்ச்சியைத் தடைசெய்யக் கூடும். விவசாயிகளுக்கு நிலுவையில் இருந்து வரும் கடன்களால் சற்று தொல்லை உருவாகும். கால்நடை பராமரிப்பில் அதிக கவனம் தேவை.
பொதுவான நிலை: ஓய்வின்றி செயல்பட்டு வரும் உங்களுக்கு இந்த வருடத்தில் பொறுப்புகள் கூடும். அலைச்சலுக்கு ஏற்ப தனலாபம் கிட்டுவதோடு உங்கள் நிர்வாகத்திறனும் மேம்படும். இயன்ற வரை அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதான மனநிலையில் இருந்து வருவீர்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரின் சந்நதியில் நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தினமும் விஷ்ணு ஸஹஸ்ராம ஸ்தோத்ரத்தைப் படிப்பதோ அல்லது காதால் கேட்டு வருவதோ நல்லது. நேரம் கிடைக்கும் பொழுது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திற்குச் சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் முன்னேற்றத்தில் இருந்து வரும் தடைகள் விலகும்.