3, 12, 21, 30
9/2/2021 4:36:03 PM
அனைவரையும் மதிக்கும் நற்குணம் கொண்ட தாங்கள் தங்களை மதிக்காதவர்களை தவறுதலாக நினைப்பதை நிறுத்திக் கொள்வது தான் நல்லது. இதனால் தங்கள் மதிப்பும் கூடுதலாகும் என்பதை மனதில் வைக்கவும். 3,12,21,30 தேதியில் பிறந்தவர்களுக்கும், C,G,L,Sல் பெயர் வைத்துக் கொண்டவர்களும், 3ம் எண்ணில் பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கும் இந்த மாதம் கனிவுடன் எல்லோரிடத்திலும் நடந்து கொள்ளுங்கள். பெரியோர்களிடம் மிக எச்சரிக்கையுடன் நடந்து நற்பெயர் பெறவும்.
பொருளாதாரம்: ஏற்கனவே துவங்கிய பணிகள் மூலம் வர வேண்டிய வருமானம் வந்தாலும் செலவுகளும் அதனை தொடர்ந்து துரத்துவதால் கைக்கு வந்து கரைந்து போகலாம். புதிய முயற்சிகள் தொடரட்டும். உடன் பண பலன்களை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரலாம். எதிர்பாராத வெளியூர் பயணங்களால் பணத் தட்டுப்பாடுகள் வரலாம். இருப்புகள் கொண்டு இன்முகம் காட்டுங்கள், குழந்தைகளின் கல்வி செலவுகளும் கூடுதலாக வந்து சேரலாம். எப்படியோ ‘‘பிரஸ்டீஜ்’’ மன்னர்களான நீங்கள் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
மங்கள நிகழ்வுகள்: சொந்த பந்தங்களுக்குள் நல்ல நட்புறவு பெருகும். இதனால் குழந்தைகளுக்கு வரன் தேடும் வேலை எளிதாகலாம். தாயார் நினைத்தது போலவே தன் சொந்தத்திற்குள் வரன் பார்த்து வாழ்க்கை பாதை அமைத்துக் கொள்ள உதவிடுவர். குறிப்பாக தந்தையார் வழி உறவுகளை எவ்வளவு சமாதானத்துடன் நடந்து கொண்டாலும் அவர்கள் சொன்னதை திரும்ப, திரும்ப சொல்லி வெறுப்பேற்றலாம். பொறுமையுடன் செயல்படுவதே சிறப்பாக அமைந்திடும்.
தொழில் அதிபர்கள்: எந்த ஒரு போட்டிகளையும் எளிதில் எதிர் கொண்டு சாதனை படைக்கும் வல்லபர்கள் நீங்கள், புதிய ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கு சாதகமான நிலையை நிச்சயம் பெறலாம். அயல்தேச ஒப்பந்தங்களும், உள்நாட்டில் உயரிய அந்தஸ்து உள்ள நிறுவனங்களும் தங்களின் உயர்விற்கு உறுதுணையாக நிற்கும். சைவ உணவகங்களை, ஆடை விற்பனை, எண்ணெய் உற்பத்தியாளர்கள், கட்டிடம் கட்டி விற்பனைக்கு விடுவோர் உயர்ந்த வருமான நிலையை பெறுவர்.
அரசியல் வாதிகள்: ஓய்வில்லாமல் உழைத்தாலும் ஒன்றும் வரவில்லையே என்று ஏங்கிய பல அரசியல் புள்ளிகளுக்கு எதிர்பாராத ஏற்றங்கள் வரலாம். தொண்டர்களின் ஆதரவும், தொகுதி மக்களின் அன்பும் அதிகமான மகிழ்வை தரும் வகையில் வந்து சேரும். அரசாங்க ஒப்பந்தங்கள் இழுபறி நிலையில் தான் உள்ளது. மறைமுக போட்டிகள் மனதை அலைக்கழிக்கும், வெளியூர் பயணங்களில் உணவுக் கட்டுப்பாடு நல்லது. குறிப்பாக கூடவே இருப்பவர்களின் ஆலோசனைகளை பெற்று செயலாக்கத்திற்கு வராதீர்கள்.
பணியாளர்கள்: வேலைகளில் வெகு மும்முரம் காட்டுவீர்கள். மேலதிகாரிகளும் மிகவும் இணக்கமாக நடந்து கொள்வர். கேட்ட இடமாறுதல், பதவி உயர்வு, எதிர்பார்த்த வீட்டு கடன், வாகன கடன்கள் யதார்த்தமாக, உடனடியாக வழங்கப்படலாம். பணியின் நிமித்தம் பல இடங்களுக்கு போக்கு வரத்திலேயே இருப்பீர்கள். அது நேரம் உணவுகளால் உபாதைக்கு உட்பட்டு வயிறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் வாய்க்கட்டு, உடற்கட்டை உறுதியாக்க உதவிடும் என்பதை மனதில் கொள்க.
உடல் நலம்: நல்ல தேக ஆரோக்கியம், அற்புதமான மனநிலை, தாய், தந்தையார் நலனும் நன்றாகவே உள்ளது. கணவருக்கு கண் பிரச்னைகள் வரலாம். மற்றபடி எல்லாம் யதார்த்தமாகவே உள்ளது. உடற்கட்டை உறுதியாக்க யோகா, பிராணாயாமம், பெரியோர்களின் போதனைகள் நிச்சயமாக உதவிடும் (அதை அனுபவித்தவர்களுக்கு தானே அதன் மகிமை தெரியும்).
கலைத்துறையினர்: திரைப்பட துறையினரின் தேடுதல்களுக்கு நிச்சயம் விடை கிடைக்கும். எதிர்பார்த்த பெரிய அளவிலான தொகைகள் கிடைக்கப் பெற்று புதுப்படங்கள் எடுக்க மிகப் பெரிய உதவியாக அமையலாம். தொலைக்காட்சி பத்திரிகை துறையில் இருப்பவர்கள் அதிகமான வருவாய்க்கு விளம்பரங்கள் வந்து வெகுவாக உதவிடலாம். வேற்று மொழியினரும் வெகுவாக உதவிட வாய்ப்பு உள்ளது.
பெண்கள்: நெருக்கடிகளை அவ்வப்போது கொடுத்து வந்த உறவுகள் எல்லாம் நெருங்கி வரும் நேரம் இது. அக்கம் பக்கத்தார்களும், அடுத்த வீட்டார்களும், அத்தைமார்களும்
அதிகமான பாச மழையை பெருங்காற்று போல் பொழிவார்கள். ஏனெனில் உங்கள் தயவு உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் படியான காலக்கட்டம் இது. குடும்ப நிர்வாகத்தை குறைவின்றி நடத்திக் காட்டும் தங்கள் திறமை நிச்சயம் போற்றப்படும்.
மாணவர்கள்: எல்லா வழிகளிலும் தங்களுக்கு சாதகமான நிலை தென்படுவதால் கற்றுக் கொண்டவைகளை கட, கடவென வெளிப்பாடு செய்து ‘ஆன்’லைனிலும் அதிரடி காட்டுவீர்கள். ஆசிரியர்களிடம் மிக்க மரியாதைகளுடன் நடந்து அவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். இதனால் மனநிலையில் பெருமகிழ்வு ஏற்படும். மொத்தத்தில் மாணவர்களின் மாண்பும், மதிப்பும், கற்று முடித்தவர்களுக்கு பணிகளும் வந்து மகிழ்வூட்டும்.