8, 17, 26
சுகமான அனுபவங்களையும், அதெல்லாம் கிடைக்கவில்லையே என்பதையும் சமமாக கருதும் குணமுடையவர்கள் நீங்கள், சாமானியத்தில் யாருடைய உதவிகளையும் பெற மாட்டீர்கள், உங்களால் பலனடைந்தவர் பலர், அவர்களால் நீங்கள் கேட்டாலும் எதுவும் கிடைக்காது என்ற நிலை தான், பல கலைகளும் அத்துப்படி உங்களுக்கு, ஆனால் எதிலும் நிலை கிடையாது என்ற நிலைதான். அயராத தங்களின் உழைப்பு அதிரடியாக சில வேலைகளில் பொருளாதார நிலையை உயர்த்தும். 8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், P,F, என்ற எழுத்தை பெயரின் முதல் பகுதியாக கொண்டவர்களுக்கும், 8ம் எண்ணை பெயர் எண்ணாக பெற்றவர்களுக்கும் இந்த மாதம் கிடைத்தற்குரிய பொக்கிஷமாக வரப்போகிறது. நினைத்தவை எல்லாம் நிரந்தரமாக்கப்படும். பொருளாதாரம்: தங்களுக்காகவே ஏற்படுத்தி பல தரப்பட்ட வகையில் பொருளாதாரம் குவிய நேரம் வந்து விட்டது. முயற்சித்து விட்டுப் போன பல விசயங்கள் மீண்டும் துளிர்த்து அதன் மூலம் அதிரடியான ஆதாயத்தை அள்ளிக் கொட்டப் போகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அப்ளை செய்து கிடப்பில் போடப்பட்ட வங்கிக் கடன்கள், வரிசையாக வந்து வாசல் கதவை தட்டி தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய உடனே புறப்படுங்கள் என்று சொல்லும், பட்ட கடன்களை எல்லாம் அடைத்துக் காட்டி பிறருக்கு பண உதவி செய்யும் அளவிற்கு வந்து மகிழ்வூட்டும். மங்கள நிகழ்வுகள்: காதலித்து கல்யாணம் முடியவில்லையே என பெருமூச்சு விட்ட சிலருக்கு பெற்றோர்களே பார்த்து திருமணத்தை முடித்து வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைந்ததுடன், அக்கம், பக்கத்தினரின் தொல்லை வேறு என பயந்து பதுங்கிய சிலருக்கு மழலைப் பேறு பெறுவதற்கான மகத்தான காலக் கட்டமாக இருப்பதால் மகிழ்ச்சி எனும் நயாகரா வீழ்ச்சியில் குளித்தது போன்ற உணர்வை பெறுவீர்கள். உடல் நலம்: நெடுங்காலமாக தங்களுடனேயே படுக்கையில் படுத்து நண்பரான பல வியாதிகள் இனிமேல் தேடினாலும் கிடைக்க முடியாத பெரும் தொலைவிற்கு பயணப்பட்டு மனதில் மிகப் பெரிய மகிழ்வினை உடல் நிலை தரும். தாய் தந்தையரும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பது குறித்து சந்தோசப்படுவர் குடும்பத்தினர். என்ன யார் தந்தாலும் உணவுக் கட்டுப்பாடுடன் செயல்பட்ட உங்களுக்கு இனிமேல் எந்த வயிறு பிரச்னைகளும் வராது. எல்லாம் மகிழ்வே இனி எப்போதும். தொழில் அதிபர்கள்: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மின் சாதனங்கள், எண்ணெய் உற்பத்தி மற்றும் சமையல் எண்ணெய், பெட்ரோலியம், நிலக்கரி சுரங்கம், வாகன உற்பத்தியாளர்கள் புதிய உலகலாவிய ஒப்பந்தங்கள் மூலம் மிக பிரமாண்டமான பொருளாதார ஏற்றத்தை காண்பார்கள். புதுமையான வாகனங்கள் வாங்கு தலும் நிலங்களை அடைவதும் மனதளவில் புத்துணர்வை ஏற்படுத்தும், தொழிலாளர்களின் ஒற்றுமையும் உற்பத்திக்கு பெரியளவில் கை கொடுக்கும். வியாபாரிகள்: ஏற்கனவே இருந்த அத்தியாவசிய பொருட்கள் எதிர்பாராத பெரும் தொகை களைப் பெற்றுத் தரும். விவசாய பொருட்கள், உணவுப் பொருட்கள், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பூஜை பொருட்கள், வாசனை திரவியங்கள், பலசரக்கு, ஸ்டேசனரி, ஜவுளி, நகை வியாபாரிகள் உயர்வான நிலையை உடனே பெறுவர், கடன்களை அடைத்து வங்கி இருப்புகளையும் பன்மடங்கு உயர்த்திக் கொள்ளும் ஒப்பற்ற கால நேரம் இதுதான் அடிச்சு கிளப்புங்கோ. அரசியல்வாதிகள்: என்னோட ஸ்டைலே அலாதியானது. யாரும் எனது கான்சப்ட்களை திருடமுடியாது என அறைகூவல் விட்டு, மக்கள் கூட்டத்தை வெகுவாக கூட்டி தலைமையை திணறவைத்துக் காட்டுவீர்கள். கலைஞர்கள்: சினிமா துறையினர், டிவி தொடர்கள் தயாரிப்பாளர்கள், நுணுக்கமான சிற்ப கலைஞர்கள் மிகப்பெரிய பொருளாதார ஏற்றம். கட்டிடம் கட்டி விற்கும் அவர்களும் உயர்வு பெறும்காலம். வாகன வடிவமைப் பாளர்கள் மிகப் பெரும் பாராட்டை குவிப்பார், ஆபரண கலைஞர்களும் இந்த அதிர்ஷ்டகரமான காலக் கட்டத்தை நன்றாக பயன்படுத்தி மகிழ்வர். அரசாங்கப் பாராட்டுக்களும் மனமகிழ்வை அளித்திடும். பெண்கள்: தந்த பணியினை தரமாகச் செய்து தனக்கு என ஒரு தனிமுத்திரையை அலுவலகங்களில் பதித்து மற்றவர்கள் மத்தியில் மகா பாராட்டுக்களைப் பெறலாம், தைரியமும், விவேகமும், உத்வேகமும் தாண்டவமாடும் என்பதால் மகிழ்ச்சி கடலில் மகளிர் மயக்க நிலையில் இருப்பது நிச்சயம். பணியாளர்கள்: எந்த பணிகளையும் மிகவும் நுட்பமாக செய்து அரசாங்க மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகளால் உயர்வான பெயர் பெறலாம் இம்மாதம். சக ஊழியர்களும் தங்களின் புதிய முறை திறமையைக் கண்டு வெகுவாக பாராட்டுவர். வாகனம், வீடு, தனி நபர் போன்ற கடன்கள் கிடைக்கப் பெற்று தங்களின் உயர்வில் வெகுவாக பலன் தரப்போகிறது. சிலர் புதிதாக நிலம் வாங்கலாம். மாணவர்கள்: திறம்பட செயல்பட்டு தேர்வை எதிர் கொண்டு வெற்றிகள் பெறுவர், டெக்ஸ்டைல், ஆசிரியர், கடல் சார் துறை, மருத்துவம், கட்டிடக்கலை கற்றோர், பெற்றோர் மனதினை குளிர்விக்கும் வகையில் புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்று மகிழ்வுறுவர்.