9, 18, 27
முகமலர்ச்சியுடன் கூடிய அமைதியான வெளித்தோற்றம் அகத்தில் எப்பொழுதும் ஒரு போராட்ட தேடுதல், ராஜதந்திரம், மெஜஸ்ட்டிக்கான தோற்றம், வார்த்தைகளில் உஷ்ணம், வகை, வகையான உணவு பதார்த்தங்களில் நாட்டம் தேசியப் பற்று, அடுத்தவரிடம் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் விருப்பம், எதிரிகளிடமும் நட்புக் கொண்டு தக்க சமயத்தில் அவர்களே மாட்டிக் கொள்ளும்படி செய்து விடுவார்கள். மொத்தத்தில் எல்லா விசயங்களும் இவர்களுக்கு சாதகமாகவே நடக்க வேண்டும், இல்லையேல் நடத்திக் கொள்வார்கள். இந்த 9,18,27 தேதிகளில் பிறந்தவர்களும் 9ம் எண்ணில் பெயர் எண் அமைந்தவர்களும், இவ்வளவு வல்லமைகளை தன்னகத்தே கொண்ட இவர்கள் இந்த மாதம் பிறரிடம் மிகவும் அடக்கத்துடன் நடந்து கொண்டால் வம்புகள் எல்லாம் வந்த வழியே ஓடிவிடும். பொருளாதாரம்: விரும்பியபடி ஏக போகமாக செலவழிக்க இயலாமல் தடுமாற்றம் காண்பர். கொடுத்தது வராது, கேட்டதும் வம்பு செய்யும், கையிருப்புகளும் கரைந்து போகும், போட்டு வைத்த பொருள் வரவு திட்டங்களில் ஏதேனும் ஒன்று தடையை ஏற்படுத்தலாம். கல்வி நிறுவனங்கள் வைத்திருப்போர் நல்ல பலன் காணலாம். மருந்து கம்பெனிகளாலும் வருமானம் உண்டு. புதிய கட்டிடங்கள் , ஏற்றுமதி, இறக்குமதி மூலம் வருமானம் அதிகரிக்கும். மங்கள நிகழ்வுகள்: தாய், தந்தையரின் மனதிற்கேற்ற வகையில் சொந்தமில்லா பந்தங்கள் மூலம் வரன்கள் கிடைக்கப்பெறுவர். தக்க நேரத்தில் சகோதர, சகோதரிகளால் தர்க்கங்கள் ஏற்படலாம் கவனம். விட்டுக் கொடுத்து போவதே மேலானது. நெடுங்கால காதல் ஜோடிகள் இந்தா, அந்தா என்று இழுபறியில் இருந்த தங்களின் திருமண திட்டங்கள் மீண்டும் தொலைக்காட்சி தொடர் போல இழுபறியிலேயே முடியும். உடல் நலம்: வலிமையும், பலமும் கொண்டவன் நானே என காட்டிக் கொண்ட நீங்கள் சற்று சோர்வுறுவது தேவையே இல்லை, எல்லா நிகழ்வுகளுக்கும் பிரதானமானது மனமே,திடமனதுடன் செயல்படுங்கள். நிச்சயமாக துணிந்தவனுக்கு... இந்த முதுமொழியை செயல்படுத்துங்கள். காட்டு ராஜாவைப் (சிங்கம்) போன்று கர்ஜிக்கலாம். தாய், தந்தையர் நலம் உயர்ந்து காணப்படும். வறுத்தது, பொரித்தது, பிரட்டல், திரக்கல் என்று வகைகளை தவிர்ப்பதே வயிற்றுக்கு நீங்கள் செய்யும் நல்ல விசயம். தொழில் அதிபர்கள்: இரும்பு உற்பத்தி, கமிஷன் துறை, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள், உலகளாவிய டிராவல்ஸ், ஏற்றுமதி செய்வோர் எதிர்பார்த்த வகையில் விருப்பம் போல் பண வரவுகளால் பெற்றாலும் அதற்கேற்ற வகையில் செலவுகளும் செய்ய நேரிடும். குறிப்பாக கட்டிடம் கட்டி விற்கும் ரியால்ட்டர்ஸ், மருந்து உற்பத்தியாளர்கள், விவசாய துறையினர், கலைத்துறையினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரிகள்: ஒருநாள் போல் இருக்காது. எல்லா நாட்களும் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். வருமானம் குறைந்தாலும் உறுதியான தங்கள் நிலையிலிருந்து இறங்காமல் கடமை உணர்வுடன் செயல்படுங்கள் ஏற்ற, இறக்கங்கள் இயல்பாமை, அரசாங்கள், ரியல் எஸ்டேட் துறையினர், அழகு சாதன விற்பனையாளர்கள் எதிர்பாராத திடீர் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். வருமுன் காப்பதற்காகவே இவைகள் வலியுறுத்தப்படுகிறது. அரசியல்வாதிகள்: பெரும் பதவிகளை நோக்கி காத்துக் கொண்டிருந்தவர்கள். இப்பொழுது இருப்பதே போதும் என்ற வகையில் தலைமைக்கும், உங்களுக்கும் முடிச்சுப் போட்டு கூட்டத்தினரால் மனம் நோகும். கவலை வேண்டாம் நிலைமை விரைவில் மாறும். கலைஞர்கள்: கடுமையான தங்கள் உழைப்பின் மூலமே இந்த மாதத்தை தள்ள நேரிடும், ஆசை வார்த்தைகளை அள்ளி இறைத்து இருக்கும் பணத்தையும் கிள்ளி எடுத்துப் போக ஒரு கூட்டமே பின்னால் தொடரும் எச்சரிக்கை. புதிய ஒப்பந்தங்கள் வரும் போது எதுவானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் ஏற்கனவே இருப்பதையும் பறித்துக் கொள்ள நேரிடும் நற்கலைஞர்களே. பெண்கள்: வீட்டுப் பிரச்னைகளில் இருந்து விடுபட்டாலும், அக்கம், பக்கம், அக்கா, தங்கை என யாராவது வம்பிழுப்பதில் அதிக ஆர்வத்துடன் வருவார்கள். மாட்டிக் கொள்ள வேண்டாம், கணவர் தரிசனம் காட்டினாலும், மாமனார், மாமியார் வழக்கம் போல அவர்களுக்குண்டான கெத்து காண்பிப்பார்கள், சற்று அடங்கிப் போங்கள். சில நேரங்களில் நான் யார் என்று காட்டுவதை தவிர்ப்பதே நலம். பணியாளர்கள்: அதிகாரிகளின் அடக்குமுறை அதிகரிக்கும். கேட்ட கடன் தொகைகள் அரசங்கத்தில் இழுபறியாகவே இருக்கும். பணிச்சுமையும் அதிகரிக்கும். போட்டு வைத்த ஜாமீன்களால் கடுமையான மன உளைச்சலை அடைய நேரிடும். இயந்திரங்களில் பணியாற்று வோர் தகுந்த முன் எச்சரிக்கையுடன் நடந்து செயல்புரிதல் வேண்டும். மாணவர்கள்: முறையான பயிற்சிகள் மூலமும், நல்ல தேடுதல்கள் மூலமும் வெற்றியை தன்னகத்தே திருப்ப முடியும், விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்படலாம். பொறியியல், பொது மருத்துவம், ஆசிரியர் கல்வி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகலாம்.