“தில்லுமுல்லு திருவாதிரை” என்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி நம்மவர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. பொய், புரட்டு, சாமர்த்தியமான செயல்பாடு, காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தைத் திரித்துப் பேசுதல் போன்ற குணங்களைக் கொண்டவர்களை தில்லுமுல்லு செய்பவர்கள் என்கிறோம். திருவாதிரை நட்சத்திரத்திற்கும் இந்த குணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும் காண்போம். திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய கிரஹம் ராகு. பேராசை, தன்விருப்பம் நிறைவேற எதையும் செய்தல் ஆகிய குணங்கள் ராகுவிற்கு உரியவை.
திருவாதிரை நட்சத்திரம் முழுமையாக மிதுன ராசிக்குள் அடங்கிவிடும். மிதுன ராசியின் அதிபதி புதன். புத்திகூர்மை, இடம் பொருள் அறிந்து பேசும் தன்மை, நேரத்திற்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் ஆகியவற்றைத் தருபவர் புதன். திருவாதிரையில் பிறந்தவர்கள் ராகு + புதன் இணைந்த குணத்தினைக் கொண்டிருப்பர். மிகவும் சாமர்த்தியசாலிகள். தான் நினைத்த செயலை செய்து முடிக்க எப்படி வேண்டுமானாலும் திரித்துப் பேசி சாதித்துவிடுவார்கள். இக்காரணங்களால் தில்லுமுல்லு திருவாதிரை என்ற பழமொழி தோன்றியிருக்கலாம் என்பது ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. உண்மையில் இப்பழமொழி குறிப்பிடும் கருத்து அதுவல்ல. வடமொழியில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை பரமேஸ்வரனின் நட்சத்திரமாகச் சொல்லப்படுகிறது. பௌர்ணமியும், திருவாதிரையும் இணையும் மார்கழி மாதம் வருகின்ற திருவாதிரை நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் என்ற நிகழ்வானது அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய தினத்தில் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரியோடு ஆனந்த தாண்டவத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அற்புதமான காட்சியைக் காண கூடுவர். “திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தில் நடராஜரை தரிசித்தால் முக்தி, அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி”, என்று பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம். தில்லை என்பது சிதம்பரத்தின் மற்றொரு பெயர். தில்லை திருத்தலத்தில் மார்கழி திருவாதிரை நாளன்று நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தோமேயானால் செய்த பாபங்கள் அனைத்தும் அகன்று முக்தி கிட்டும். தில்லையில் முக்தி தரும் திருவாதிரை என்ற சொல் வழக்கானது திரிந்து தில்லுமுல்லு திருவாதிரை என மாறியிருக்கிறது. இந்தப் பழமொழியின் உண்மைக் கருத்தினை உணர்ந்துகொண்டு வரும் ஆருத்ரா தரிசனத் திருநாள் (10.01.2020) அன்று சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் தரிசனம் காண்போம். முக்திக்கு வழி தேடுவோம்!
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.