‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ `கோபுர தரிசனம் கோடி பாவ நாசம்’ - என்பதெல்லாம் முன்னோர்கள் வாக்கு. தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, மனதை இழுத்துப் பரவசப் படுத்துவது கோபுரம். என்னவெல்லாமோ சிந்தனையில் இருந்து குழம்பித் தவிப்பவருக்குக் கோபுரத்தைப் பார்த்த உடனே, அவரை அறியாமலே மனம் தெய்வத்திடம் சென்றுவிடுகிறது. மனதில் இருந்த அனைத்தும் விலகி, விநாடி நேரமாவது மனம், தன்னுடைய உண்மை வடிவான ஆத்ம வடிவிற்குப் போய் விடுகிறது. அதன்பிறகு மனம் பழையபடியே திரும்பினாலும், அதில் சற்று தெளிவு இருக்கும். இதற்காகவே, கோபுரம். இது தூரப்பார்வை; அதாவது ‘லாங் ஷாட்’. அடுத்தது, கிட்டப்பார்வை.
கோபுரத்தை நெருங்கிப் பார்த்தால், தெய்வத்தின் பல நிகழ்வுகள் கோபுரத்தில் பொம்மைகளாக இடம் பெற்றிருக்கும். குறிப்பாக, அந்தக் கோயில் உள்ள ஊரில் நிகழ்ந்த தெய்வச் செயல்கள் இடம் பெற்றிருக்கும். தெய்வத்தின் அருளாடல்களையும் உள்ளூர் தகவல்களையும் இடம்பெறச் செய்து, அடுத்த தலைமுறைக்கும் ஆன்மிகத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது கோபுரம்.