மகரம்
கோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால் குறிக்கோளிலிருந்து மாறமாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பு இருந்தும் தவறமாட்டீர்கள். பழைய நினைவுகளை அவ்வப்போது அசைப்போடும் நீங்கள், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க தயங்கமாட்டீர்கள். குழந்தையின் அழுகையையும் சங்கீதமாய் பார்க்குமளவிற்கு கலை ஞானம் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவித்தீர்களே! சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே! எதை எடுத்தாலும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் உள்ளுக்குள் அச்சுறுத்தியதே! குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் தவித்தீர்களே! உண்மையான பாசமுள்ளவர்களை தேடி அலைந்தீர்களே! இப்படி நாலா விதங்களிலும் உங்களை பாடாய்ப்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்வதால் வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும்விரயாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தூக்கமின்மை, திடீர் பயணங்கள், சுபச் செலவுகள் வந்து போகும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் உத்யோகத்தில் திடீர் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.
யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும். சுகலாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 ராகுபகவான் செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர்கள் கூட இனி உங்களை மதித்துப் பேசுவார்கள். உங்களால் பலன் அடைந்தவர்களும் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டிட பணிகளை,இனி முழுமையாக கட்டி முடிக்கும் அளவிற்கு பணம் கிடைக்கும். கன்னிப் பெண்களே! திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! இனி கல்யாணம் கூடி வரும்.
விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ மாணவியர்கர்களே! நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும். ஆசிரியரின் ஆதரவு உண்டு. நல்ல நட்புச் சூழல் உருவாகும். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும். வியாபாரிகளே! இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மருந்து,எண்ணெய் வித்துக்கள்,ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்களே! தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். கணினி துறையினர்களே! அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். சின்னதாக ஒரு நெஞ்சு வலி வந்தாலும் பெரிய நோய் ஏதேனும் இருக்குமோ என்றெல்லாம் பயம் வந்ததே! எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஆர்வம் செலுத்த முடியாமல் ஒருவித போராட்டமும், படபடப்பும், இனந்தெரியாத கவலையும் உங்களை ஆட்டிப் படைத்ததே! நீங்கள் எது பேசினாலும் அதுவே உங்களுக்கு பிரச்னையாக முடிந்ததே! ஆத்திரத்தில் அறிவிழந்து சில விஷயங்களை செய்து விட்டு பிறகு வருத்தப்பட்டீர்களே! உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வாகனம், செல்போன் வாங்குவீர்கள். வேலை அமையும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் மனஅழுத்தம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொந்தரவு வந்துப் போகும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும்.வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். கொடுக்கல்வாங்கலில் நிம்மதி ஏற்படும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவியுயர்வும் இனி தேடி வரும். இந்த ராகு கேது மாற்றம் பிரச்னை புயலில் சிக்கியிருந்த உங்களை கரையேற்றுவதுடன் அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை - குன்றத்தூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகந்தழீஸ்வரரை திங்கட் கிழமைகளில் சென்று வணங்குங்கள். மூடை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.