கும்பம்
அணைக்கட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர் எவ்வளவு ஆவேசமாக வெளியேறுகிறதோ அதே சீற்றத்துடன் அநியாயங்களைத் தட்டிக் கேட்பீர்கள். ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணெயும் போல ஓர வஞ்சனையாக நடந்துக் கொள்ள மாட்டீர்கள். பயிற்சி இல்லாமலே பாடும் குயிலைப் போல இயற்கையாகவே இசை, கவிதை ஞானம் உங்களுக்குண்டு. உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்புழக்கத்தையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்றெல்லாம் நினைத்து குழம்புவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்க செய்வீர்கள்.
என்றாலும் பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டை, சச்சரவு வரும். உங்களின் குறிக்கோள், கனவுகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தம்-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சொத்து தாமதமாக வந்தாலும்,குறைவாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். சிலர் சொந்த ஊரை விட்டு விலகி அருகிலிருக்கும் நகரத்திற்கு குடிபெயர்வீர்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தனலாபாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். புது சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். உறவினர்கள் மெச்சுவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவினங்கள், இனம்புரியாத கவலைகள், கனவுத் தொல்லைகள் வந்து போகும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும் போது செல்போனில் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.
சேவகாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கொஞ்சம் கண் காணியுங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விசயமாக பிரபலங்களின் உதவி நாடி அலைந்தீர்களே! ஒரு பயனும் இல்லையே! ஆனால் இப்பொழுது நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும். ஆன்மிகவாதிகள்,கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.
குடும்ப பிரச்னைகளில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. தாய்மாமன், அத்தை வகையில் பகைமை வெடிக்கும். கலை,இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்களே! தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணம் இனி கூடி வரும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். உயர்கல்வியில் தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். அரசியல்வாதிகளே! எதிர்க் கட்சியினரை விமர்சித்து பேசவேண்டாம். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அண்டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளே! பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு, உணவு,புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்கள் பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வார்கள். உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே! சம்பள உயர்வுடன் புதிய சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் திறமைகளுக்கேற்ப நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும்,தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி.ஐ.பிகள்,தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் தள்ளிப் போன திருமணம் முடியும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் சுகபாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை கேது செல்வதால் சோம்பல் நீங்கும். தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள்.
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வந்தார்களே! இனி உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். ராகு உங்களை பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவு வலுவாக உள்ளதால் எங்கும் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், கோவனூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅரங்கநாதரை புதன்கிழமைகளில் சென்று வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். நினைப்பதெல்லாம் நிறைவேறும்.