மீனம்
தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! வெகு தொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மனிதர்களின் கள்ள மனசை அறியும் சக்தி இல்லாமல் போய் விட்டதே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள். என்பதை பார்ப்போம்
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கி பாடாய்ப் படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை இல்லாமல் தவிர்த்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் விலகும். இனி உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். அவர்களின் ஆழ்மனதில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும்ஜீவனாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் உங்களின் தோற்றப் பொலிவுக் கூடும். வற்றிய பணப்பை நிரம்பும். தங்க நகைகள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். என்றாலும் வீண் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக விமர்சனங்கள் வந்துச் செல்லும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் எளிதாக முடிய விஷயங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். எவ்வளவு தான் உழைத்தாலும் கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். உங்களின் கௌரவத்தை பாதிக்கும் சம்பவங்கள் நிகழக் கூடும். யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பித்தத்தால் தலைச்சுற்றல், வயிற்று வலி, வலிப்பு வந்துச் செல்லும்.
உங்கள் தனபாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தந்தையின் ஆரோக்யம் சீராகும். சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இளைய சகோதரர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிப்பெண்களே! நெடுந்தூர பயணங்கள் வேண்டாமே! லேசாக தலைச்சுற்றல் வரும் என்பதால் மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை. கன்னிப் பெண்களே! யாரையும் எளிதில் நம்பாதீர்கள். காதல் விவகாரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மாணவர்களே! மறதி,மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி சம்பந்தமாக வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
வியாபாரிகளே! போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.உத்யோகஸ்தர்கள்! யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கணினி துறையிலிருப்பவர்களே! அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களே! நெடுநாளாக காத்திருந்தற்கேற்ப புது வாய்ப்புகள் வந்தமையும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு பதட்டம்,டென்ஷன் இருக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் சிலர் உங்களை சீண்டிப் பாப்பார்கள். எடுத்த வேலையை நான்கைந்து முறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். அதனால் மன இறுக்கத்துக்குள்ளாவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். உங்கள் சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் மங்கள இசை முழங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை கேது செல்வதால் பணத்தட்டுப்பாடு, மனஉளைச்சல், வீண் டென்ஷன், ஒருவித சலிப்பு, வந்துப் போகும். முன்யோசனையில்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீண் வறட்டுக் கவுரவத்திற்காக கையிருப்பை கரைக்காதீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள்.
நெருங்கிய உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வரும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகல் இறகாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சின்னச் சின்ன அவமானங்களையும் சந்திக்க வேண்டியது வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் கசக்கி பிழிந்தாலும் இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரிய வைக்கும்.
பரிகாரம்:
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். இதய நோயாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.