மிதுனம்
வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு வேலை பார்க்கும் நீங்கள், அஞ்சா நெஞ்சர்கள். முதுகுக்குப் பின்னால் பேசாமல் முகத்துக்கு நேராக பளிச்சென்று பேசுவீர்கள். நல்லது கெட்டது நான்கையும் அறிந்து வைத்திருக்கும் பகுத்தறிவுவாதிகள். கண்ணீர் சிந்தி வருபவர்களின் மனக்காயங்களை ஆற்றுபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.2.2019 முதல் 31.8.2020 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு ஏடாகூடமாய் பேச வைத்து எல்லாவற்றிலும் சிக்க வைத்தார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்புகளையும் கரைய வைத்தார். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை குறைத்தார். இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் ஓரளவு பிரச்சனைகள் குறையும். இனி இடம்,பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். கௌரவச் செலவுகளையும் குறைப்பீர்கள். பணவரவும் அதிகரிக்கும். அவசர தேவைக்கு வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
ஆனால் ராசிக்குள் ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். யூரினரி இன்ஃபெக்சன்,ஹார்மோன் கோளாறு மற்றும் தலை,தோள்பட்டையில் வலி வந்து போகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள். போலி மருத்துவரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். முன்கோபம் அதிகரிக்கும். சின்னச் சின்ன வேலைகள் கூட சிக்கலாகி முடியும். என்றாலும் உங்கள் அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். தண்ணீரை காய்ச்சி குடிக்கவும். வாகன விபத்துகள் நிகழக்கூடும். டென்ஷனாக இருக்கும் நாட்களில் வாகனத்தை இயக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தமதசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். கடனாக கொடுத்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள் கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு வரக்கூடும். உத்யோகத்தில் இடமாற்றங்களும், வேலைச்சுமையும் இருக்கும்.
ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். சொந்தம் பந்தங்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்கள் சஷ்டமலாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் இழப்பு வரும். சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். ரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் திடீர் பணவரவு உண்டு. வாகன விபத்துக் ஏற்படக்கூடும். ராசியில் நிற்கும் ராகு சலிப்பையும், அலட்சியப் போக்கையும் உண்டாக்குவார். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். சாட்சிக் கையெழுத்துப் போட்டு பலமுறை சிக்கிக்கொண்ட அனுபவம் உங்களுக்கு உண்டு. இனிமேல் ரொம்ப தெரிந்தவராக இருந்தாலும், அவருக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். குழந்தை பாக்யம் உண்டாகும். சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது விதிமுறைகளை மீற வேண்டாம். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப்பெண்களே! பெற்றோருடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுவது நல்லது. தள்ளிப்போன கல்யாணம் முடியும். மாணவர்களே! நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் முன் வரிசையில் வந்து அமருங்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி குறை கூறவேண்டாம். வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். வியாபாரிகளே! போட்டியாளர்கள் அதிகரிக்கத்தான் செய்வார்கள். பெரிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களே! தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். கணினி துறையினர்களே! சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்பாற்றலுக்கேற்ற நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்து போங்கள். பரிசு, பாராட்டுகள் குவியும்.
கேதுவின் பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி வீண் பயம் விலகும். பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போங்கள். பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசு காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சேவகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரைகேதுபகவான் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோ பலம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கியில் லோன் கிடைக்கும். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிரிகள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்களில் வெற்றியுண்டு. கௌரவப் பதவியில் அமர்வீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியும் விரயாதிபதியுமான பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். திருமண முயற்சி கைக்கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பாராத பயணம் உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் உங்கள் கை ஓங்கும். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல் நலம் சீராகும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் உங்களை வந்து சந்திப்பார்கள். ராசிக்கு 7ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் கூட்டுத்தொழிலை தவிர்க்கப் பாருங்கள். பங்குதாரர்களுடன் பகை வரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மாறும். உங்களின் நிர்வாகத்திறன் கூடும். உள்ளத்தையும் உரசிப்பார்த்தாலும், கேதுவால் எதிர்நீச்சலில் வெற்றி பெறும் சக்தி உண்டாகும்.
பரிகாரம்:
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகிலுள்ள கிள்ளை எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு புற்று மாரியம்மனை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள். தொட்டது துலங்கும்.