கடகம்
தொலை தூரச் சிந்தனை கொண்ட நீங்கள், சிறு வயதிலேயே பெரிய கனவுகள் காண்பவர்கள். இலக்கை எட்டிப் பிடிக்க இரவுபகல் பார்க்காமல் உழைப்பீர்கள். தர்மசங்கடமான நேரத்திலும் நகைச்சுவையாகப் பேசுபவர்களே! இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழகமாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.2.2019 முதல் 31.8.2020 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்திருந்த ராகுபகவான் திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரணகாரியமே இல்லாமல் பிரச்னைகளில் சிக்க வைத்தாரே! ஒருநாள் சிரித்தால், மூன்று நாள் அழ வைத்தாரே! தலை வலி, நெஞ்சுவலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தாரே! எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் விலகும். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள்.
சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் தடைபட்டுக் கொண்டிருந்ததே! இனி அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். மற்றவர்களின் பிரச்னைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! அந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடுவீர்கள். பார்த்தும் பார்க்காமல் போன உறவினர்கள்,நண்பர்கள் இனி வலிய வந்துப் பேசுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்கு கிடைக்கும்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
சஷ்டமபாக்யாதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் இழுபறியான வேலைகள் உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்தபடி வீடு,மனை அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் இக்கால கட்டத்தில் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. சின்னச் சின்ன விபத்துகள் வந்து போகும். சில கூடா பழக்கங்கள் உங்களை நெருங்கக்கூடும். புதிய நண்பர்களுடன் கவனமாக இருங்கள். வீடு மாற வேண்டியது வரும். உங்களின் பூர்வபுண்ணியாதிபதியும் தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகுபகவான் செல்வதால் வீண் செலவுகளிலிருந்து மீள்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். புது சொத்து வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வழக்கு சாதகமாகும். பிள்ளைகளிடம் வெறுப்பாக பேசாமல் இனி பாசமாக பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை உடன்பிறந்தவர்கள் இனி உணர்வார்கள். வழக்குகளில் இனி வாய்தா இல்லை, தீர்ப்பு சாதகமாகும். தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். குலதெய்வக் கோவிலை எடுத்துக் கட்டுவீர்கள். என்றாலும் சின்ன சின்ன விபத்துகள் வரக்கூடும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் இவற்றிலெல்லாம் கௌரவப் பதவிகள் தேடி வரும்.
கன்னிப்பெண்களே! மனம் தெளிவாகும். வேலை கிடைக்கும். மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. அரசியல்வாதிகளே! தன் பலத்தை நிரூபித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். அக்கம்பக்கம் வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரிகளே! போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும். உத்யோகஸ்தர்களே! மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துக் கொண்டு உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே சண்டை, சச்சரவுகளையும், மனைவிக்கு உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் என தொல்லை தந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். கணவன் மனைவிக்குள் ஈகோ, வீண் விவாதங்கள் நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளின் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பழைய சொத்தை விற்று விட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் நண்பராவார்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அநாவசியச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் எதார்த்தமாக பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கண்,காது, பல்வலி வந்துபோகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தையாருடன் சின்ன சின்ன கருத்துமோதல்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். சோர்வு,களைப்பு வரும். தூக்கம் குறையும். சுக லாபாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். திருமணம் கூடி வரும். மூத்த சகோதரர் வகையில் ஆதாயமுண்டு. உயர்ரக வாகனம் வாங்குவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஆனால் திடீர் செலவுகளால் திணறுவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரும். சொத்து வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். நெருங்கிய உறவினரை இழக்க வேண்டியது வரும். கேது 6-ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்தி சாலித்தனத்துடன் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை இப்போது வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். உறவினர்கள் மத்தியில் உங்களின் தகுதி உயரும்.
உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்களை ஏளனமாக பார்த்த உயரதிகாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறமையாக செயல்படுவீர்கள். குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவியுயர்வு,சம்பள உயர்வெல்லாம் உண்டு. இந்த ராகுகேது மாற்றம் அடிவாரத்தில் இருந்த உங்களை உச்சிக்கு கொண்டு வருவதுடன் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், வேல்கோட்டம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுருகனின் வேலை ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமைகளிலோ, சஷ்டி திதியிலோ சென்று வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள். செல்வம் சேரும்.