சிம்மம்
கிளம்பினா சிங்கம் போல, கம்பீரமாக கிளம்புவீர்கள். இல்லேன்னா ஆட்டைப் போல அடங்கிக் கிடப்பீர்கள். அதற்குக் காரணம் ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொண்ட அனுபவம் இருக்கிறதே! சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.2.2019 முதல் 31.8.2020 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு காரியத்தடைகள்,மன உளைச்சல், சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமை என அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும், பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் கட்டுப்படுத்துவார். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலாட்டா குடும்பமாக இருந்த நிலை மாறி அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
கணவன்-மனைவிக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி விட்டுக் கொடுத்து போவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். மகளுக்கு தள்ளிப் போன கல்யாணம் இனி கூடி வரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி உற்சாகமாய் கலந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தூக்கமில்லாமலும், நிம்மதியில்லாமலும், உடலாலும், மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள் இனி ஆரோக்யமாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும்அட்டமாதிபதியுமான குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் அடி மனதிலிருந்த பயம்,கவலை விலகும். கல்யாணம், கிரகபிரவேசம் என அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுரக வாகனம் வாங்குவீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும்.
கன்னிப்பெண்களே! தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல், சமயோஜித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். ஆசிரியரின் ஆதரவு கிட்டும். அரசியல்வாதிகளே! இழந்த பதவியைப் பெறுவார்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது. வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்தி பெரியளவில் கொள்முதல் செய்வீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் வருவார்கள். உத்யோகஸ்தர்களே! அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையினர்களே! அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவும் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அதிகமான எடையை தூக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆன்மிகத்தில் உச்சத்தை அடைவீர்கள். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரும். உள்மனசில் எப்போதும் ஒருவித பயமும், பதட்டமும், சந்தேகமும் இருந்து கொண்டிருக்கும். உறவினர்களின் ஒருசிலர் பகையாவார்கள். தாய், தாய் மாமா வழியில் சங்கடங்கள் வரும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பழைய சொந்தம் பந்தங்கள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். நடைப்பயிற்சி செய்யத் தவறாதீர்கள். உங்கள் திருதியஜீவனஸ்தானாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். வீடு மாறுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும். தந்தையாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் வந்து போகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கேது 5ம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம் தலையிட வேண்டாம்.
வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். உங்கள் வார்த்தையை, ஆலோசனையை ஏற்பார்கள். புரோக்கரேஜ்,கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள் உயர்வை கொஞ்சம் போராடி பெறுவீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவால் ஞானமும், ராகுவால் வசதியும், நிம்மதியும், சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தும் கிட்டும்.
பரிகாரம்:
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு வனதுர்க்கையை செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.