தனுசு
தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள் தான். ஏக்கர் கணக்கில் சொத்து சேர்ந்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாவப்போவதில்லை என்ற பிரம்ம சூத்திரத்தை அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் செய்ய விடாமல் நாலாப்புறமும் பாடாய்ப்படுத்தியெடுத்திக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். எளிதில் முடித்து விடலாம் என்று நினைத்த காரியங்கள் கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். அமனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து போகும். மனைவிவழி உறவினர்களால் அவ்வப்போது மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். காசு பணம் எவ்வளவு இருந்தும் என்ன பிரயோஜனம் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என நெடுங்காலமாக வருந்தினீர்களே, இனி கவலை வேண்டாம். அழகும், அறிவும் மிகுந்த குழந்தை பிறக்கும். அரசு வேலைகள் தடைபட்டிருந்ததே! இனி விரைந்து முடியும். குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சிறப்பாக முடிப்பீர்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும்சுகாதிபதியுமான குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப் போன திருமணம் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும்.
விரயாதிபதியும்பூர்வபுண்யாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் நடக்கும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கன்னிப்பெண்களே! சகஜமாக பேசியதால் பல இடங்களில் தர்மசங்கடத்திற்கு உள்ளானீர்களே! இனி இடம்,பொருள் ஏவல் அறிந்து பேசுவீர்கள். கசந்த காதல் இனிக்கும். மாதவிடாய்க்கோளாறு, மன இறுக்கம் விலகும். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள். அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். சகாக்களுடன் அவ்வப்போது மனக்கசப்பு வந்து நீங்கும்.
வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுனீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். 7ம் வீட்டில் ராகு வந்தமர்தால் கூட்டுத் தொழிலில் குழப்பங்களும், பிரிவுகளும் வரும். பங்குதாரர்களுடன் அவ்வப்போது வீண் விவாதங்கள் வரத்தான் செய்யும். கொஞ்சம் பொறுத்து போங்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துக் கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணினி துறையினர்களே! வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். என்றாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.கலைத்துறையினர்களே! போட்டிகள் அதிகரிக்கும். என்றாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு கைத்தட்டலுடன், காசும் சேரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோஜித புத்தியுடன் பேச வைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். இனி அவர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். ராசிக்குள் கேது அமர்வதால் எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன், தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும். வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். உடன்பிறந்தவர்களால் வீண் விவாதமும், மன உளைச்சலும் வரக்கூடும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். பழைய நண்பர்களால் உதவியுண்டு. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப்பற்றாக்குறை ஏற்படும். தந்தைக்கு நெஞ்சு வலி, வேலைச்சுமை வந்து போகும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். சஷ்டமலாபாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். புது வேலை அமையும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு வந்துப் போகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், பிரச்னைகள் வந்து போகும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ரத்த சோகை, மூச்சுப் பிடிப்பு, சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும். தியானம், யோகா இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு இருந்தாலும் அவ்வப்போது அவர்களால் சச்சரவுகளும் இருக்கும்.
வியாபாரிகளே! பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்த்துவிடுங்கள். உத்யோகத்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கத்தாலும், மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் உங்களை குறை கூறத்தான் செய்வார்கள் கவலை வேண்டாம். இந்த ராகு கேது மாற்றம் வேலைச்சுமையால் களைப்பு, சோர்வையும், சின்ன சின்ன தோல்வியால் மனஇறுக்கத்தையும் தந்தாலும் தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடைய வைக்கும்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், மலுமாச்சம்பட்டி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகசக்தி அம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடம் அல்லது கோவிலை புதுப்பிக்க உதவுங்கள். அதிஷ்டம் பெருகும்.