மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை நான்காம் இடத்திலிருந்த ராகு பகவான் 3ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அவரது சஞ்சார நிலை மனதில் அசாத்திய தைரியத்தினை உருவாக்கும். இதனால் மனதில் வீணான பிடிவாத குணத்திற்கு இடமளிப்பீர்கள். அதிமுக்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்து சாதிப்பீர்கள். இக்கட்டான தருணங்களில் உங்களது அதிரடி நடவடிக்கைகள் வெற்றியைப் பெற்றுத் தரும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மையை அடைவீர்கள். மூன்றாம் இடத்தில் ராகுவின் அமர்வு அறிஞர்களுக்கு புதிய உத்வேகத்தினைத் தரும். குறிப்பாக காவல்துறையினர் தடயவியல் அறிவியலில் சாதிப்பார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு ராகுவின் துணையால் எழுத்து வேகம் அதிகரிக்கும். ஞாபக மறதித் தொந்தரவு அகலும். ராகு, புதனின் வீட்டினில், அதுவும் மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருக்கு குடும்பப் பிரச்னைகளில் உதவி செய்வீர்கள். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களால் உதவி கிடைக்கும். நண்பர்களுக்கு ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து உதவி செய்வீர்கள். அலுவலகத்தில் முக்கியமான பணிகளின் போது உங்களின் இயற்கை குணமான வேகமும், பிடிவாதமும் தலையெடுக்கலாம். இதனால் சுற்றியுள்ளோருடன் மனஸ்தாபம் உண்டாகக்கூடும். ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் இடத்திலிருந்து விலகி கேது 9ம் இடத்திற்கு வர உள்ளார். இதனால் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். மனதினில் அவ்வப்போது தத்துவம் சார்ந்த எண்ணங்கள் இடம்பிடிக்கும்.
உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. தகப்பனாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பூர்வீக சொத்துக்களில் ஒரு சில இழப்புகளைக் காண நேரிடும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றில் முன்நின்று செயல்படும் வாய்ப்புகள் உருவாகும். அயல்நாட்டுப் பணிகளுக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். ஒருசிலருக்கு தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சுகஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் இருந்து ராகு விலகியிருப்பதால் சுகமான வாழ்வியல் நிலைக்குக் குறைவிருக்காது. தாயார் வழி உறவினர்களோடு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழி உறவினர்கள் அவ்வப்போது உங்கள் உதவியை நாடி வருவர். குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய கால நேரம் கூடி வரும்.
நவீனமயமான வீட்டு உபயோகப் பொருட்கள் சேரும். ராகு மூன்றாம் வீட்டில் இணைவதால் காது, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு ஆகிய பகுதிகளில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். ஒரு சிலருக்கு உடற்தோலில் குறைபாடு தோன்றலாம். எனினும் 2019 அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் குருவின் அருட்பார்வை ராகுவின் மீது விழுவதால் பிரச்னைகள் குறைந்து நற்பலன்கள் விளையும். எதிரிகள் உங்களோடு மோதி பலம் இழப்பர். கடன் பிரச்னைகள் குறையும். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க உள்ளீர்கள். அரசுப் பணியாளர்கள், உத்யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றத்திற்கு ஆளாவார்கள். சுயதொழில் செய்வோர், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியோர் தொழிலாளர்களுடன் நிதானமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். ரியல் எஸ்டேட் துறையினர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். மொத்தத்தில் இந்த ராகு&கேதுப் பெயர்ச்சியின் மூலம் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களே அதிகமாக உள்ளது.
பரிகாரம்:
புதன்கிழமை தோறும் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. இயலாதவர்கள் அனந்தசயனப் பெருமாளின் படத்தினை வைத்து புதன்கிழமையில் வீட்டுப் பூஜையறையில் பூஜித்து வாருங்கள். நேரம் கிடைக்கும்போது திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாப ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள நினைத்தது நடக்கும்.