மகரம்
ஏழரைச்சனியின் தாக்கத்தினாலும் ஜென்ம ராசியில் கேதுவின் அமர்வினாலும் தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களுக்கு தற்போது நடைபெற உள்ள ராகு-கேதுப் பெயர்ச்சி சற்று ஆறுதலைத் தரும். ஜென்ம ராசியில் கேதுவின் அமர்வினால் இதுவரை சஞ்சலமான மனநிலையை சந்தித்து வந்துள்ளீர்கள். மனதளவில் சிரமத்தைத் தந்து வந்த கேது தற்போது 12ம் இடத்தில் அமர்வதால் ஓரளவிற்கு அநாவசியமான குழப்பங்கள் நீங்கும். என்றாலும் அவர் ராசிநாதன் சனியுடன் இணைந்து 12ல் அமரும்போது நிம்மதியான உறக்கத்தினைக் கெடுப்பார். ஞானகாரகன் கேது 12ல் அமரும்போது கனவில் காணும் விஷயங்களை நிஜத்தில் நடக்கக் காண்பீர்கள். சனியுடன் இணைவதால் வீணான பயமும், மனக்கலக்கமும் உண்டாகும். சுயநலத்தினை விடுத்து அடுத்தவர்களின் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.
சொந்தப் பிரச்னையை விட நம்மிடம் வந்து சேரும் அடுத்தவர்களுடைய பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். இதுநாள் வரை 7ம் இடத்தில் இருந்து வந்த ராகு 6ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பது மிகுந்த நற்பலனைத் தரும். 7ல் இருந்து ராகு விலகுவதால் இதுநாள் வரை இருந்து வந்த திருமணத்தடை அகலும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறக் காண்பீர்கள். சுபசெலவினை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார நிலையும் முன்னேற்றத்தினைக் காணும். வளரும் பாவகம் என்று கணிக்கப்படும் ஆறாம் இடத்தில் ராகுவின் அமர்வு உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். சத்ரு, ரோக, ருண ஸ்தானம் என்று கருதப்படும் 6ல் ராகு அமர்வதால் சத்ரு ஜெயம், கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல், ரோக நிவாரணம் போன்ற நற்பலன்கள் கிட்டும். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்து வரும் தொந்தரவில் இருந்து விடுபடும் அதே நேரத்தில் வாயுப்பிடிப்பு, தசைப்பிடிப்பு, கொழுப்புத் தொந்தரவு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் எண்ணெயினால் ஆன தின்பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
ராகுவின் சஞ்சாரம் நன்மையைத் தரும் அதே நேரத்தில் வீண் வம்பு விவகாரங்களையும் தோற்றுவிக்கலாம். சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கள்ளமில்லா உள்ளம் கொண்ட நீங்கள் முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் எல்லோருடனும் மிகுந்த கவனத்துடன் பழகி வர வேண்டியது அவசியம். இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். நுட்பமான அறிவுத்திறன் வளர்வதால் மாணவர்களின் கல்விநிலை உயர்வடைந்து வரும். நெடுநாட்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தங்கள் ஆய்வினில் வெற்றி காண்பார்கள். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திக்க நேரிடலாம். சமையல் கலைஞர்கள், பழைய இரும்பு வியாபாரம் செய்பவர்கள், மோட்டார் மெக்கானிக் ஆகியோர் தங்கள் திறமையின் மூலம் நற்பெயர் அடைவார்கள். தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும்.
ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை வரும் ஒன்றரை வருட காலத்தில் காண்பீர்கள். லாப ஸ்தானத்தில் குரு பகவானின் சாதகமான சஞ்சார நிலை செய்தொழிலில் கிட்டும் லாபத்தினை உறுதி செய்யும். வெளிநாட்டு உத்யோகத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நடைபெற உள்ள ராகுகேதுப் பெயர்ச்சியினால் பெற்றோர் மற்றும் வாரிசுகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களின் உடல்நிலையில் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். பொதுவாக மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேதுப் பெயர்ச்சி கெடுபலன்களை விட நற்பலன்களையே அதிகமாகத் தரும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம் :
கேது குருவின் வீட்டில் அமர்ந்து ஞானத்திற்கான தேடுதலை உண்டாக்குவார். தினமும் பூஜையறையில் ஞானஸ்கந்தனை வணங்கி வருவதோடு ஸ்கந்த குரு கவசம் படிப்பதோ அல்லது கேட்பதோ நல்லது. நேரம் கிடைக்கும் போது சுவாமிமலை திருத்தலத்திற்குச் சென்று தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாத ஸ்வாமியை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஞானமும், புகழும் உயர்வடையும்.