கும்பம்
கும்ப ராசிக்கு கேது 12ம் இடத்திலிருந்து 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கும், ராகு ஆறிலிருந்து 5ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்கள். கும்ப ராசியைப் பொறுத்த வரை ராகு நற்பலன்களையே அதிகமாகத் தருவார். 5ம் இடத்து ராகுவினால் சிந்தனைத்திறன் கூடும். மனதில் உள்ள கற்பனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சிப்பீர்கள். இதுநாள் வரை கண்ட கனவினை நனவாக்கும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றியும் காண்பீர்கள். நினைப்பது நடக்கும் என்றாலும் எதற்கும் ஒரு முறை வைத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுத்த முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது டக்கென்று பயன்படுத்திக் கொள்வீர்கள். இதுநாள் வரை விடை தெரியாமல் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மனதில் இருந்த விரக்தியை தூரவிரட்டி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயம் என்பதே இல்லாமல் தைரியத்துடன் பணியாற்றுவீர்கள். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார்.
குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை, மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். எதிர்பாராத இடமாற்றத்தினால் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள் பிரிவினையை சந்திக்கக் கூடும். பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உருவாகும். உடன்பிறந்தோரின் நலனுக்காக ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆலோசனைகள் வெற்றி பெறும். நீங்கள் முன்நின்று செயல்படும் விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக இந்த நேரத்தில் கோயில் கும்பாபிஷேகம், அரசாங்கத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் முதலான பொதுத்தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் அடைவீர்கள்.
கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். அசையாச் சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கப் பெறுவீர்கள். பாகப்பிரிவினை பிரச்னைகள் முடிவிற்கு வரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும் அதே நேரத்தில் 11ம் இடத்தில் வாசம் செய்ய உள்ள கேது தான தர்மங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். விரயம் அதிகமானாலும் கூட நற்பெயர், புகழ் ஆகியவற்றை கேது தருவார். அலுவல்பணி காரணமாக எதிர்பாராத பயணங்களையும், இடமாற்றத்தினையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்கள் தங்கள் தனித்திறமையின் காரணமாக அலுவலகத்தில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டுவார்கள். மேலதிகாரிகள் செய்யும் தவறுகளையும் சரி செய்து நிறுவனத்திற்கு நற்பெயர் வாங்கித் தருவீர்கள்.
உங்களுக்குக் கீழ் பணி செய்வோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். வியாபாரிகள் எதிர்பார்க்கும் லாபத்தினைக் காண்பது சிரமம் என்றாலும் தொழில் ரீதியான பயணங்கள் வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும். கூட்டுத்தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தொழில் முறையில் புதிய பங்குதாரர்களைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். மளிகை, கமிஷன் ஏஜென்சி, தரகு, உணவுப்பொருள் விற்பனை ஆகிய தொழில்கள் ஏற்றம் அடையும். மொத்தத்தில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியினால் ஓய்வு என்பது குறைந்தாலும், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயரும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம்:
சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடாழ்வார் சந்நதியில் நெய்விளக்கேற்றி வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். கருடசேவை உற்சவத்தின்போது புளியோதரை நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதும் நல்லது. நேரம் கிடைக்கும் போது நாச்சியார் கோவில் திருத்தலத்திற்குச் சென்று கல்கருடனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.