மீனம்
நான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்தில், அதுவும் வித்தைக்கு அதிபதியாகிய புதனின் வீட்டில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரத்தால் உங்களது செயல்பாடுகள் சிறப்பான வெற்றியைப் பெறும். ஒவ்வொரு செயலிலும் புத்திகூர்மை வெளிப்படும். திட்டமிட்டுச் செயல்படுவதை விட நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதே சிறந்தது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ராகுவின் சுக ஸ்தான சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் புதிதாய் சேரும். சனியின் இணைவினைப் பெறும் கேது, ஓய்வினைக் கெடுத்து, சிறிது அலைச்சலைத் தந்தாலும் செயல்வெற்றியில் தடை உண்டாகாது. வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். நான்காம் வீட்டில் இணைந்திருக்கும் ராகுவோடு சூரியன் சேரும் காலத்தில், அதாவது வருகின்ற ஆனி மாதத்தில் மட்டும் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 10ம் இடத்துக் கேது ஆன்மிப் பணிகளில் அதிக நாட்டம் கொள்ளச் செய்வார். உங்களை நாடி வருவோருக்கு பிரதிபலன் எதிர்பாராது உதவி செய்து வருவீர்கள். பொதுத் தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட வேண்டியிருக்கும். எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தி வந்த நீங்கள் கேதுவினால் சற்று சிரமம் காண்பீர்கள். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பணிகளை கடைசி நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள். இதனால் நீங்கள் எதிர்பார்க்கும் பலனில் பெருத்த மாற்றம் ஏதும் உண்டாகாது என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான்காம் இடத்தில் இணைவு பெறும் ராகு உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்.
ஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதியின் வலிமை பெற்றவர்கள் சிறப்பான வாழ்வியல் நிலையை அடைவார்கள். ராசிநாதன் குருவின் பார்வையும் 2019 அக்டோபர் மாதம் வரை ஜென்ம ராசியின் மீது விழுவதால் வாழ்வியல் முன்னேற்றம் என்பது சிறப்பாகவே இருந்து வரும். 11ம் இடத்தில் இருந்து கேது விலகுவதால் மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். தொழில் முறையில் காணும்போது வங்கி, இன்ஸ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சிறப்பு பெறுவார்கள்.
தொழில்நுட்பம், மெக்கானிகல் மற்றும் இதர அறிவியல் துறை சார்ந்த பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைப்பதோடு பதவி உயர்வும் கிட்டும். கீழ்நிலைப் பணியாளர்கள் செய்யும் தவறினை பிறர் அறியாதவண்ணம் சுட்டிக்காட்டி அவர்களையும் நல்வழிப்படுத்துவீர்கள். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானத்துடன் செயல்படுவது நல்லது. 10ம் இடத்து சனி மற்றும் கேதுவினால் உண்டாகும் அலைச்சல் காரணமாக நாள் முழுவதும் உழைப்பதால் இரவினில் நிம்மதியான உறக்கம் காண்பீர்கள். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரஹங்கள் நன்மையைத் தருவார்கள் என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி மீன ராசியினருக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.
பரிகாரம் :
தினமும் ஹயக்ரீவர் வழிபாடு செய்து வாருங்கள். தேர்விற்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் முதலான எழுதுபொருட்களை வாங்கித் தாருங்கள். வசதி படைத்தவர்கள் ஏழை மாணவர் ஒருவரின் கல்விச் செலவினை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது திருவஹீந்திரபுரம் சென்று ஹயக்ரீவரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வியல் தரம் உயர்வடையும்.