ரிஷபம்
அஷ்டமத்துச் சனியின் பிடியில் தவித்து வரும் ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை வரவிருக்கும் ராகு-கேதுப் பெயர்ச்சி வித்தியாசமான பலன்களைத் தர உள்ளது. இரண்டில் அமர உள்ள ராகுவினால் தனலாபமும், எட்டில் இணையும் கேதுவினால் எதிர்பாராத நஷ்டமும் உண்டாகக் காண்பீர்கள். இதுநாள் வரை மூன்றில் அமர்ந்து உங்களை அதிவேகமாக இயக்கி வந்த ராகு வரும் 13.02.2019 முதல் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராகு பகவான் தான் அமரும் இடத்தின் வலிமையைக் கூட்டுவார் என்ற கருத்தின்படி இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் வலிமை பெற்று வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. பல்வேறு வழிகளில் பொருள் வரவினைக் காண உள்ளீர்கள். வாக்கு, குடும்பம், தனம் ஆகியவற்றின் நிலையை சொல்லும் இரண்டாம் இடத்தில் ராகு அமர்ந்து தனது ஆதிக்கத்தினைச் செலுத்த உள்ளார். இரண்டாம் இடத்து ராகுவினால் நிஷ்டூர வார்த்தைகள் வாயிலிருந்து வெளிப்படக்கூடும்.
நம்மையும் அறியாமல் நாம் பேசும் வார்த்தைகள் அடுத்தவர்கள் மனதினைப் புண்படுத்தக்கூடும் என்பதால் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. முகத்தில் உஷ்ணத்தின் காரணமாக சரும நோய்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் யாருக்கும் எளிதாக எவ்விதமான வாக்குறுதியும் அளிக்காதீர்கள். ராகுவுடன் சுக்கிரன் இணையும் காலத்தில் ஒரு சிலருக்கு பார்வைக் கோளாறு காரணமாக கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். மூன்றாம் இடத்தில் இருந்து ராகு அகலுவதால் உடன் பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அவரோடு இணைந்து செயல்பட்டால் குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகளை அடியோடு களைய முடியும். சொத்து விவகாரங்களில் இருந்து வரும் பிரச்னைகள் விலகும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயர்வடையும்.
அவர்களால் சற்று கூடுதல் செலவுகளுக்கு ஆளானாலும் கூட மன நிம்மதி காண்பீர்கள். அவர்களின் பெயரில் அசையாச் சொத்து வாங்க முற்படலாம். மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். கூட்டுப்பயிற்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுத்தரும். எட்டாம் வீட்டில் சனிகேதுவின் இணைவினால் அநாவசிய செலவுகள் கூடும். ஆன்மிகச் செலவுகளிலும், தான தரும விஷயங்களிலும் தாராளம் காட்டுவீர்கள். ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவானோடு எட்டில் கேது இணைவதால் பூர்வீக சொத்து விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. இதுநாள் வரை 9ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். அதே நேரத்தில் உங்கள் உடல்நிலையை கேது பகவான் சற்று சோதிப்பார். பித்த ரோகத்தினால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
அதே போல கேதுவின் எட்டாம் இடத்து வாசம் வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிப்பதோடு அவரது உடல்நிலையிலும் சற்று சிரமத்தினைத் தரக்கூடும். உத்யோகஸ்தர்களுக்கு இடம் மாறக்கூடிய சூழல் உருவாகலாம். ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், இரும்பு, கம்பி, லாகிரி வஸ்துக்கள் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் கவலை தேவையில்லை. அதன் பின் குரு பகவானும் எட்டில் இணைவதால் ரிஷப ராசிக்காரர்கள் 2019 அக்டோபர் இறுதி வாரம் முதல் அதிக எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியானது உங்களுக்கு சற்று சோதனையைத் தருவதோடு உங்கள் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றத்தினை உண்டாக்கும்.
பரிகாரம் :
பிரதி சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயக தரிசனம் மனதைத் தெளிவாக்கும். நேரம் கிடைக்கும்போது திருச்சி மலைக்கோட்டை விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.