மிதுனம்
கண்டச்சனியின் காலத்தினை அமைதியாகக் கடந்து வரும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி சரிசம பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. 13.02.2019 அன்று நடைபெற உள்ள ராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் பல மாறுதல்களை உண்டாக்கும். இரண்டாம் இடத்தில் இது வரை வாசம் செய்து வந்த ராகு இப்போது ஜென்ம ராசிக்கு வர உள்ளார். புதனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்யும் குணம் படைத்தவர்கள். அதோடு தற்போது ஜென்ம ராசியில் ராகு வந்து அமர்வதால் ஆராயும் குணம் தீவிரமடையும். சின்னச் சின்ன செயல்பாடுகளைக் கூட அதிக யோசனைக்குப் பிறகே செய்வீர்கள். பார்ப்பவரின் கண்களுக்கு நீங்கள் சந்தேக புத்தி உடையவரோ என்று எண்ணத் தோன்றும். வீட்டை பூட்டும்போது கூட ஒரு முறைக்கு இரு முறை இழுத்துப் பார்ப்பீர்கள். உறவினர்களால் கலகம், விரோதம் போன்றவற்றை சம்பாதித்துக்கொள்ள நேரிடும்.
அதுவும் வரும் ஒன்றரை ஆண்டு காலமும் சனிகேதுவின் இணைவு ஏழில் நீடிப்பதால் நம் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். இதனால் நாம் செய்ய வேண்டிய கடமையைத் தவிர உறவினர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். புதனின் வீட்டில் ராகு இணைவதால் அறிவியல் அறிவு வளரும். சாஸ்திரம் பேசும் பெரியோர்களுடன் அறிவியல் ரீதியாகப் பேசி வீண் வாதத்தில் ஈடுபடுவீர்கள். நினைத்தவற்றை எளிதாக அடைய பல குறுக்கு வழிகளை ராகு சிந்தையில் தோன்றச் செய்வார். மனதை அலைபாயவிடாமல் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உடன்பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். முன்னோர்களின் சொத்துக்களில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தோன்றும். முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் கூடாது. மாற்று மதத்தினர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஒரு நேரம் பிடிவாதமாகச் செயல்படும் நீங்கள் மறுநேரம் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாது தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை தயங்காது செய்து வருவீர்கள். ஒரு சில விஷயங்களில் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்குவீர்கள். இதனால் அடுத்தவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடலாம். ஏழாம் இடத்தில் வந்து அமர உள்ள கேதுவினால் உண்டாகும் நன்மை சத்ரு நாசம் என்பதே. நமக்கு எதிராக வேலை செய்யும் திரைமறைவு எதிரிகள் காணாமல் போவார்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி காணும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகளுக்கு துணை நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அவர் துவளுகின்ற நேரத்தில் நீங்கள் தூண்டுகோலாய் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். அவரது உடல்நிலையிலும் அவ்வப்போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவரது பெயரில் இருக்கும் சொத்துக்கள் உருமாறக்கூடும். தொழில்முறை எதிரிகள் காணாமல் போவார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையான பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டியிருக்கும். மேலதிகாரிகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் எந்தச் சூழலிலும் நிதானத்தோடு எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். பொதுவாக இந்த ராகுகேதுப் பெயர்ச்சியினால் வரும் ஒன்றரை வருட காலத்திற்கு நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
பரிகாரம்:
ஜென்ம ராகுவும், சப்தம கேந்திர கேதுவும் சற்று பிரச்சினையைத் தோற்றுவிப்பவர்களே. ராகுகேதுப் பெயர்ச்சி நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் பிரத்யங்கிரா தேவியை வழிபடுவது நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள அய்யாவாடி திருத்தலத்திற்குச் சென்று பிரத்யங்கிரா தேவியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.