கடகம்
குருபகவானின் சாதகமான பார்வை பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்கி வரும் உங்களுக்கு ஜென்ம ராசியில் இருந்து ராகு விலகுவது சற்று மன நிம்மதியைத் தரும். இதுநாள் வரை ஜென்ம ராசியில் அமர்ந்து உத்வேகத்தை அளித்த ராகு வரும் 13.02.2019 முதல் 12ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ஜென்ம ராகுவினால் மனதில் உத்வேகத்துடன் செயல்பட்ட வந்த நீங்கள் தற்போது சற்று நிதானத்துடன் செயல்படுவீர்கள். மனோகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு ராகுவின் இடமாற்றம் சிந்தனையில் தெளிவினைத் தரும். எது ஒன்றிலும் ஸ்திரமாக முடிவெடுக்கத் துவங்குவீர்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஜென்ம ராசியில் அமர்ந்து பரபரப்போடு செயல்பட வைத்த ராகு பகவான் தற்பொழுது 12ம் இடத்தில் வந்து அமர்வதால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல அனுபவப் பாடம் கிட்டும். வேலைப்பளு கூடுவதால் சற்று சுகத்தினை இழக்க நேரிடும்.
நமது அவசரத்தேவைக்கு அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்க இயலாது. தன் கையே தனக்குதவி என்ற மனப்பக்குவத்தினை பெறுவது அவசியம். 12ல் ராகு அமர்வதால் அநாவசிய செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் தனநஷ்டத்தினை சந்திக்க நேரிடும். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் துறைகளில் சேமிப்பது நன்மை தரும். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இதுநாள் வரை குறைந்திருந்த எழுத்து வேகம் ராகுவால் உயர்வு பெறும். அறிவியல் துறை ஆய்வாளர்கள் தங்கள் பணியில் ஓய்வில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும்.
தொழில் ரீதியாக சனி-கேதுவின் இணைவு பாதகமான அம்சத்தினைத் தருவதால் பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு அயல்நாட்டுப் பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டென்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்குக் கீழ் அடிமைத் தொழில் செய்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும்.
எவர் ஒருவரையும் சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்ரஹத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை 7ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித அச்சம் அகலும். ஆறாம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை நாசம் செய்வார். தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும். அதே நேரத்தில் சனியுடன் இணைவதால் சரும வியாதிகள் தோன்றக்கூடும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. நண்பர்களுக்காக பிரதிபலன் எதிர்பாராது உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கனவுத் தொல்லைகள் அவ்வப்போது இடம்பிடிக்கும். மொத்தத்தில் வரும் ஒன்றரை ஆண்டு காலமும் நற்பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம் :
திங்கட்கிழமை தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை நமஸ்கரித்து வாருங்கள். திங்கள் தோறும் தவறாமல் சிவாலய பிரதக்ஷிணம் செய்வது நன்மை தரும். பௌர்ணமி நாளில் அன்னதானம் செய்வது மனதில் சந்தோஷத்தை நிறையச் செய்யும். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.