சிம்மம்
13.02.2019 அன்று நடைபெற உள்ள ராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் நல்ல முன்னேற்றத்தினை உண்டாக்கும். விரய ஸ்தானம் எனப்படும் 12ல் இருந்து லாப ஸ்தானம் ஆகிய 11ம் இடத்தில் ராகுவும், ரோக ஸ்தானம் ஆகிய 6ல் இருந்து 5ம் இடத்தில் கேதுவும் வந்து அமர உள்ளனர். சிந்தனையைக் குறிப்பது ஐந்தாம் இடம் என்பதால் சனியுடன் இணையும் கேது மனதில் அநாவசியமான சிந்தனைகளையும், வீண் குழப்பத்தினையும் தோற்றுவிப்பார். சாஸ்திர, சம்பிரதாயங்களின் மீது கோபமும் வெறுப்பும் உண்டாகக்கூடும். 2019 அக்டோபர் மாதத்தில் உண்டாகும் குருப்பெயர்ச்சிக்குப் பின் இந்த நிலை மாறி மிகச்சிறந்த ஞானம் கிடைக்கக் காண்பீர்கள். 11ம் இடம் என்பது லாப ஸ்தானம் மட்டுமல்ல, செயல் வெற்றியைக் குறிக்கும் ஸ்தானமும் கூட. அதே போன்று நினைத்த காரியம் கைகூட 11ம் இடம் வலுப்பெற்றிருக்க வேண்டும்.
11ல் வந்தமரும் ராகு உங்கள் செயல்களில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார். நினைத்தவற்றை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். ராகு புத்திகாரகன் புதனின் வீட்டில் அமர்வதால் கூர்மையான அறிவுடன் வெற்றி காண்பீர்கள். பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு உயரும். அசையாச் சொத்து சேரும். 11ல் ராகுவின் இணைவு பிரபலமடையச் செய்யும். நல்ல யோகம் உடைய ஜாதகர்களுக்கு உயர்பதவியில் உள்ளோருடன் தொடர்பு கிட்டும். உங்களுடைய ஆலோசனையின் மூலம் ஆதாயம் காண்போரின் எண்ணிக்கை உயரும். இதனால் தனிப்பட்ட முறையில் உங்களுடைய கௌரவம் உயரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி ஆதாயம் காண்பீர்கள். பாகப்பிரிவினை விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனைப் பெற்றுத் தரும்.
11ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். முக்கியமான பிரச்னைகளில் மாற்று மதத்தினரின் உதவியால் தீர்வு காண்பீர்கள். நெடுநாட்களாக நிலுவையில் இருந்து வரும் வழக்குப் பிரச்னைகள் விரைவில் முடிவிற்கு வரும். கடன் சுமை எதிர்பாராத வகையில் காணாமல் போகும். வெளிநிலுவையில் இருக்கும் பாக்கித் தொகைகள் வசூலாகும். ஐந்தாம் இடத்து கேதுவினால் உண்டாகும் குழப்பங்கள் உங்கள் செயல் வேகத்தினைக் குறைக்கும். கேது ஐந்தாம் இடத்தில் சனியுடன் இணைவதால் பிள்ளைகளின் மன நிலையில் அதிக அக்கறை கொள்ளுதல் நலம். உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும் நேரம் இது. வியாபாரிகள் தங்கள் நவீன உத்தியின் மூலம் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். லாப ஸ்தானத்தில் ராகு இணைவதால் தொழில் மூலம் உண்டாகும் தனலாபம் பன்மடங்காகப் பெருகும்.
சுயதொழில் சிறக்கும். சிறிய அளவில் முதலீடு செய்யக்கூடிய பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற தொழில்களைச் செய்து வருவோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலைச் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவத் துறையினர், நீதித்துறையினர், ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. மொத்தத்தில் கேதுவினால் தடுமாற்றம் உண்டானாலும், ராகுவினால் வெற்றி பெற்று வருவீர்கள். வரும் ஒன்றரை ஆண்டு காலத்தில் இழப்பினை விட வெற்றியே அதிகரித்திருக்கும்.
பரிகாரம்:
பிரதி ஞாயிறுதோறும் ராகு காலம் முடிவடையும் வேளையில் சரபேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். ராகுகேது பெயர்ச்சி நாளில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதத்தினை தானமாகத் தாருங்கள். கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனம் சென்று சரபேஸ்வரரை வழிபட்டு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்ளுங்கள்.