கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி புதுவிதமான அனுபவத்தைத் தர உள்ளது. இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 11ல் அமர்ந்திருந்த ராகு அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு தொழிலைக் குறிக்கும் 10ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் தொழில் முறையில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் நல்ல தனப்ராப்தி உண்டு. வேலைப்பளு கூடுவதால் சற்று சிரமத்தினை சந்திப்பீர்கள். மனதில் தோன்றும் விஷயங்களை செய்து முடிக்க பல்வேறு யுக்திகளை கையாளுவீர்கள். போட்டியாளர்களின் மத்தியில் திறம்பட செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் சிந்தனையில் இருந்த குழப்பங்கள் அகலும். நான்காம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் நல்ல ஞானத்தை வழங்குவார். எதிர்பாராத நேரத்தில் தோன்றும் பிரச்னைகளை சமாளிக்கும் முறையினை கேது பகவான் கற்றுத் தருவார். பலவிதமான வித்தைகளையும் அறிந்து கொள்வீர்கள்.
நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்து கொண்டு செயலில் நடைமுறைப்படுத்துவீர்கள். என்றாலும் ஏற்கெனவே நான்கில் சனி அமர்ந்திருப்பதால் கேதுவின் செயல்பாட்டில் எதிர்மறையான பலன்களும் உண்டாகக் கூடும். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்ய இயலாது போகலாம். இதனால் சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நான்காம் இடத்துக் கேது துஷ்டர்களின் சேர்க்கையைத் தருவார். ஒரு சில நேரங்களில் இந்த சேர்க்கை நமக்கு பாதுகாப்பினைத் தந்தாலும் பின்னர் அதுவே ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். நான்கில் சனிகேதுவின் இணைவு என்பது தேவையற்ற நட்புறவை ஏற்படுத்தி குடும்பத்தில் குழப்பத்தைத் தோற்றுவிக்கக் கூடும். நல்லவர்-தீயவர்களைப் பிரித்தரிந்து பழக வேண்டியது அவசியம். பெண்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தோன்றும்.
அவ்வாறில்லாமல் இரண்டிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற கூடுதல் பயிற்சி தேவை. அரும்பாடுபட்டு உழைத்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும் என்பதை அறியவும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களைத் திறம்பட வழிநடத்திச் செல்லும். வாழ்க்கைத்துணையின் பெயரில் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் ராகுவின் இணைவு தொழில்முறையில் சிறப்பான நற்பலன்களைத் தரும். புத்திகாரகன் புதனின் ராசியில் ராகு அமர்வதால் உங்கள் மூளையைப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். தொழில்முறையில் வித்தை ஞானம் மேம்படும். பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு திறமையாக லாபம் காண்பீர்கள். ராகுவின் துணை இருப்பதால் ஏதேனும் ஒரு வழியில் காரியவெற்றி சாத்தியமாகும்.
இக்கட்டான சூழலில் விவேகமான செயல்பாடுகள் உங்களின் பெருமையை உயர்த்தும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆயினும் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். தங்களிடமிருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்விற்கான வாய்ப்பினைத் தேட நேரிடும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். செல்வச் சேர்க்கையில் சிறிதும் குறைவு உண்டாகாது. ஜீவன ஸ்தானத்தில் ராசிநாதன் புதனுடன் ராகு இணையும் காலத்தில் வாழ்வியல் தரம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய வளர்ச்சிகளைக் கண்டு வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம்:
புதன்கிழமை தோறும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் சந்நதிக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். ஓய்வு நேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவதும் மன நிம்மதியைத் தரும். ஹனுமான் டாலர் பதித்த செயினை கழுத்தில் அணிவதன் மூலம் தீயவர்களை அடையாளம் காண்பீர்கள். நேரம் கிடைக்கும்போது சுசீந்திரம் ஆஞ்சநேயரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நலம் உண்டாகும்.