துலாம்
வரும் 13.02.2019 அன்று நடைபெற உள்ள ராகுகேதுப் பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கும். நமது அந்தஸ்தையும், கௌரவத்தையும் வெகுவாக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவீர்கள். இதுநாள் வரை 10ம் இடமாகிய தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் முறையில் கடும் அலைச்சலைத் தந்து வந்த ராகு தற்போது 9ம் இடத்தில் அமர்வது நல்ல முன்னேற்றத்தினைத் தரும். பூமி லாபம் என்பது இந்த நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் வாங்கும் அசையாச் சொத்துக்கள் உங்கள் பரம்பரைக்கே உதவும் வகையில் நிலைப்பெறும் தன்மை உடையதாக இருக்கும். அதே போல பூர்வீக சொத்துக்கள் ராகுவின் அருளால் வந்து சேரும். ராசிநாதன் சுக்கிர பகவான் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ராகுவோடு இணையும் காலத்தில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள்.
முதலீடு செய்து வைத்திருப்பவை சிறப்பான பண வரவினை ஈட்டித் தரும். தன்னலம் கருதாது பொதுக்காரியத்தில் ஈடுபட்டு வந்த நீங்கள் ராகுவின் தற்போதைய நிலையால் பொதுச்சேவையின் மூலம் ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று கணக்கிடுவீர்கள். தான, தருமங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நீங்கள் அதன் மூலமாகவும் பயன் பெற முற்படுவீர்கள். ராகுவின் சஞ்சாரத்தால் ஏதேனும் ஒரு வழியில் பொருள் சேர்க்கும் ஆசை மனதில் துளிர்விடும். ராகுவின் வலைக்குள் சிக்காது அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அமைதியான முறையில் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் பொருள் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிக ஈடுபாடு, தத்துவார்த்த சிந்தனைகளில் நாட்டம் கொண்டிருக்கும் நீங்கள் சரியான குரு கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். இதனால் மனதில் தெளிவற்ற தன்மை தொடர்ந்து கொண்டிருக்கும்.
2019ம் வருடம் அக்டோபர் மாதத்தில் குருவின் பார்வை ராகுவின் மீது விழுவதால் மனதில் தெளிவு கிட்டும். அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைப் போக்கும் ஆன்மிகவாதி ஒருவரை சந்திப்பீர்கள். 9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். அலுவல் பணி காரணமாக செய்யும் பிரயாணங்களில் நல்ல ஆதாயம் காண்பீர்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும். உங்களுக்கு வரவேண்டிய லாபம் என்பது சீரான முறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். உத்யோகஸ்தர்கள் அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். குறுக்கு வழி முன்னேற்றம் நிரந்தர நன்மையைத் தராது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
மூன்றாம் இடத்தில் சனியுடன் இணையும் கேது சற்றே தைரியக்குறைவினைத் தோற்றுவிப்பார். எந்த ஒரு விஷயத்தையும் நீண்ட யோசனைக்குப் பிறகு செய்ய முற்படுவீர்கள். அநாவசியமான பயம் செயல்வெற்றியைத் தாமதமாக்கும். மனதில் ஒரு விஷயத்தைக் கற்பனை செய்துகொண்டு அதனை நினைத்து வீணாக பயப்படுவீர்கள். சனி மற்றும் கேதுவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சிறிது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிக்கலாம். குடும்பப் பெரியவர்களின் மனவிருப்பத்தினை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிட்டும். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் ராகுவின் அருளால் பரம்பரைப் பெருமையை காப்பதோடு எதிர்கால சந்ததியினரின் நலத்திலும் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள்.
பரிகாரம்:
மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி நாட்களில் வாராஹி அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்து தானம் செய்வதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும் போது தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மஹாவாராஹியின் சந்நதிக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்து வழிபட சொத்துப் பிரச்னைகள் தீர்வடையும்.