விருச்சிகம்
ஏழரைச் சனியின் தாக்கத்தினை அனுபவித்து வரும் உங்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி சற்று சோதனையைத் தர உள்ளது. உங்கள் ராசிக்கு எட்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் ராகுவும் 2ம் இடமாகிய தன ஸ்தானத்தில் கேதுவும், இடம் பெயர உள்ளது பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைத் தரக்கூடும். தன ஸ்தானத்தில் சனியுடன் வந்து இணையும் கேது சேமிப்பினைக் கரைப்பார். பொதுவாக ராகு தான் அமருகின்ற ஸ்தானத்தின் பலத்தினை உயர்த்தும் வகையில் பலன்களைத் தருவார், கேது அதற்கு நேர் மாறாக தான் அமரும் இடத்தின் வலியைக் குறைப்பார். தன ஸ்தானத்திற்கு கேது வரவிருப்பதால் பொருள்வரவு தடைபடும். விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசிய செலவுகள் அதிகமாகும். இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்பத்தில் அவ்வப்போது கலகங்கள் உண்டாகும்.
பேசும் வார்த்தைகள் தவறாகப் பொருள் காணப்பட்டு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகக்கூடும். தத்துவ சிந்தனையுடன் கூடிய வார்த்தைகள் நல்ல அறிவுரையாக அமைந்தாலும் மற்றவர் மனதைப் புண்படுத்தக்கூடும் என்பதால் இடம், பொருள் அறிந்து பேசுவது நல்லது. ராகுவின் எட்டாம் இடத்து இணைவு நினைத்த காரியம் எளிதில் நடைபெறாமல் இழுபறியைத் தரும் நிலையை உருவாக்கும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு மன வருத்தம் கொள்வீர்கள். உங்களை நேசிப்பவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லும் சூழல் உண்டாகலாம். ஜென்மராசியில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்களை நேர்வழியில் நடத்திச் செல்வதில் உறுதுணையாய் இருப்பார். இரண்டாம் இடமாகிய வாக்கு ஸ்தானத்தில் கேது அமர்ந்து சனியின் இணைவினைப் பெறுவதால் வாயிலிருந்து உங்களையும் அறியாமல் கடுஞ்சொற்கள் வெளிப்படலாம்.
உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை நேரத்திற்கு உட்கொள்ள இயலாது போவதால் மனதில் ஒரு வித விரக்தியான எண்ணம் குடிபுகும். வாழ்க்கைத்துணை மற்றும் வாரிசுகளின் பெயரில் சொத்து சேமிப்பில் ஈடுபட தடை ஏதும் இருக்காது. உங்கள் பெயரில் இருக்கும் கணக்கில் சேமிப்பு உயராமல் போனாலும், உங்களைச் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு ராகு கேதுவினால் உயரும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற கடின உழைப்பு தேவை. நீங்கள் இயற்கையிலேயே நல்ல அறிவாளிகளாக இருந்தாலும் கூட பொது அறிவினைத் தரும் இரண்டாம் வீட்டில் சனி-கேதுவின் இணைவு சிறிது தடுமாற்றத்தைத் தரும்.
தேர்வின்போது தேர்வு எண் எழுதுதல், பேனாவில் மையின் அளவு, ஹால்டிக்கெட் எடுத்துச் செல்லுதல் போன்ற சிறுசிறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எட்டாம் இடத்து ராகுவினால் மருத்துவ செலவினை சந்திக்க நேரலாம். ஒரு சிலருக்கு நெருப்புக்காயம் தோன்றும் வாய்ப்பு உண்டு. பெண்கள் சமையல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். களவு போகும் வாய்ப்பு உண்டு என்பதால் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய விலையுயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நேரம் இது. அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரலாம் என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ராகு&கேதுவின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தருகிறது.
பரிகாரம்:
ராகுகேதுப் பெயர்ச்சி நாளில் அருகில் உள்ள ஆலயத்தில் நடைபெறுகின்ற பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. செவ்வாய் தோறும் ராகு கால வேளையில் துர்கையம்மனுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். நவராத்திரி சமயத்தில் வரும் துர்காஷ்டமி நாளில் சிறப்பு அன்னதானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது மைசூர் சாமுண்டீஸ்வரியம்மனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.