தனுசு
12 ராசிக்காரர்களில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியின் மூலம் சற்று அதிக சிரமத்தினை சந்திப்பவர்கள் தனுசு ராசிக்காரர்கள் என்றால் அது மிகையில்லை. ஜென்மச்சனியின் தாக்கத்தினாலும், ராசிநாதன் குருவின் 12ம் இடத்து அமர்வினாலும் ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் வந்திணையும் கேதுவால் மன சஞ்சலம் அதிகரிக்கக் கூடும். ராகு உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டிலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் இடம் பெயர உள்ளார்கள். பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் குருபகவானின் ஆதிக்கத்தை உடையவர்கள் என்பதால் நாணயத்துடன் செயல்பட்டு வருவார்கள். நினைத்த காரியத்தை நேர்மையான முறையில் செயல்படுத்துவதில் சிறிதும் தயக்கமின்றி செயல்படக்கூடியவர்கள். என்றாலும் தற்போது ஜென்ம ராசியில் இணையும் சனி மற்றும் கேதுவினால் சற்று பலம் இழந்து காணப்படுவார்கள். அவ்வப்போது தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தினைக் குறைக்கும்.
சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட இந்த நேரத்தில் துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயங்களில் உண்டாகும் பிரச்னைகளை எளிதில் தீர்க்க வழி தெரியாது சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். தான, தருமங்களில் ஈடுபாடு அதிகரிப்பதால் கையிருப்பு கரையும். பொருளாதார நிலை உயர்வடைய சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் பலம் வாய்ந்த செயல்பாடுகள் உங்களைப் பாதுகாக்கும். குடும்ப விஷயங்களிலும், பண விவகாரங்களிலும் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. ஏழாம் இடத்து ராகுவினால் தூரதேச பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. செல்லும் இடங்களில் புதிய நண்பர்களின் சேர்க்கை உருவாகும். அதே நேரத்தில் மாற்று மதத்தினரால் சிரமத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. கூட்டுத்தொழில்கள் லாபகரமாக அமையும். கணக்கு வழக்குகளில் சிறப்பு கவனம் தேவை.
தொழிலதிபர்கள் வருமானவரித்துறையின் சோதனை வட்டத்திற்குள் சிக்குவார்கள். உத்யோகஸ்தர்கள் முக்கியமான நேரத்தில் தோன்றும் கவனச் சிதறல்களால் அலுவலகத்தில் சற்று சிரமத்தினை சந்திக்க நேரிடும். ஆயினும் உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையால் இழப்புகளை சமாளித்து வெற்றி காண இயலும். ஏழாம் இடத்தில் உண்டாகும் ராகுவின் இணைவினால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மாற்று மதத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். ஏற்கெனவே உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் தீவிரமாக உடல்நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. சனி மற்றும் கேதுவின் இணைவு சரும நோயினைத் தரக்கூடும். முன்னோர்களின் சொத்துக்களில் புதிய பிரச்னைகள் தோன்றும்.
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் கேதுவினால் சிறிது சிரமத்தினையும், ராகுவினால் அனுகூலத்தையும் காண உள்ளீர்கள். நன்மையாகிலும் சரி, தீமையாகிலும் சரி, எதுவாக இருந்தாலும் ராகு சற்று கூடுதலாகத் தர வல்லவர். கேது உள்ளதைக் கெடுப்பவர். ராகுவின் துணை இருந்தாலும் அவர் பேராசையைத் தூண்டக்கூடியவர். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு உள்ளதையும் இழந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதிக முதலீடு இல்லாமல் நல்ல லாபத்தினைக் காண வேண்டும். பெரிய முதலீடு நஷ்டத்தினைத் தந்துவிடும். சமயோஜிதமாகச் செயல்பட்டு வெற்றி காணுங்கள். இந்த ஒன்றரை ஆண்டுக்காலம் தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்த வரை தேர்வெழுதும் காலமாக எண்ணிக் கொள்ளுங்கள். சிந்தனையைச் சிதறவிடாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
பரிகாரம்:
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற கீதையின் தத்துவத்தை வாழ்வின் நடைமுறையில் புரிந்துகொள்ளும் காலம் இது. கீதையை அருளிய கண்ணனை தினமும் வழிபட்டு வாருங்கள். ஓய்வு நேரத்தில் பகவத்கீதையை பொருளுணர்ந்து படித்து வாருங்கள். நேரம் கிடைக்கும்போது சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திற்குச் சென்று பகவானை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மங்களம் உண்டாகும்.