06.03.2026
அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை
குடும்பம்: இதுவரை, ராசிக்கு லாப ஸ்தானத்தில்சஞ்சரித்துவந்த சனி பகவான், இப்போது ராசிக்கு விரய ஸ்தானமாகிய மீன ராசிக்கு மாறுகிறார். விரயாதிபதியான குரு பகவான், திருதீய ஸ்தானத்தில் (3) வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். வரவிற்கு மீறிய செலவுகள் கவலையை அளிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரும்பான்மையான செலவுகள், சுபச் செலவுகளாகவே இருப்பது, மனத்திற்கு நிறைவைத் தரும். குடும்பத்தில் சுப-நிகழ்ச்சிகள் நிகழும். தசா, புக்திகள் அனுகூலமில்லாமல் அமைந்திருப்பின், புதிய கடன்களை ஏற்க நேரிடும். கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்க வேண்டிய காலகட்டம் ஆரம்பமாகியுள்ளதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் நீடிக்கும். நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கு உதவ கடன் கொடுக்காதீர்கள். மீறினால், பிரச்னைகள் உங்களைப் பாதிக்கும் என "காலப்ரகாஸிகா" என்னும் புகழ்வாய்ந்த ஜோதிட நூல் எச்சரிக்கை செய்கிறது. இத்தகைய கிரக நிலைகள் அமைந்திருக்கும்போது, கடன் ெகாடுப்பதையும், வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நெருங்கிய உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதமும் அதனால் கருத்துவேற்றுமையும் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்தும், சற்று அனுசரித்தும் நடந்துகொள்வது மிகவும் அவசியம். சொத்து சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நீடிக்கும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படுவதற்கும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளியூர்ப் பயணங்களின்போது, கைப் பொருட்களையும், பணத்தையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். களவுபோக ேநரிடலாம்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில், செவ்வாய் - ராகு இணைந்திருப்பதால், மேலதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். ஜீவன காரகரான சனி பகவான், விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வேலைச் சுமை அதிகமாக இருக்கும். சிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களில் பலர், பல காரணங்களுக்காக, தாய் நாடு திரும்ப நேரிடும்.
தொழில், வியாபாரம்: விரய ஸ்தானத்தில் சனி பகவான் நிலை கொண்டுள்ளதால், லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடவேண்டியிருக்கும். சந்தை நிலவரம் கவலையை அளிக்கும். விற்பனையும், லாபமும் எதிர்பார்த்தைவிட, சற்று குறைவாகவே இருக்கும். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யும் ஊழியர்களினால், பிரச்னைகள் ஏற்படும். சகக் கூட்டாளிகள் பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். சில தருணங்களில், பண நெருக்கடியும் ஏற்படக்கூடும். கூடியவரையில், கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது வாங்கும் கடன் விருத்தியாகும் எனக் கூறுகிறது, ஜோதிட ரத்னாவளி எனும் புராதன ஜோதிட நூல் விவரித்துள்ளது. உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது,
கலைத் துறையினர்: லாப ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டுள்ள இத்தருணத்தில் சனி பகவானும் விரய ஸ்தானத்திற்கு மாறுவதால், வாய்ப்புகள் குறையும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். கிடைக்கும் சந்தர்ப்பங்களிலும், எதிர்பார்த்திருந்த அளவிற்கு வருமானம் கிடைக்காது. தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், புதிய கடன்களை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கூடியவரையில், தவிர்க்க முயற்சியுங்கள். மக்களிடையே செல்வாக்கும், புகழும் குறையக்கூடும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தங்களது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
அரசியல் துறையினர்: அளவிற்கு மீறிய உற்சாகத்தையும், தன்நம்பிக்கையையும் குறைத்துக் கொண்டு, உண்மை நிலையை உணர்ந்து கொள்ளவேண்டிய தருணம் இது! பேச்சையும், பத்திரிகைப் பேட்டிகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அரசியல் துறைக்கு ஆதிக்கம் பெற்றுள்ள சுக்கிரனும், மற்ற கிரகங்களும் சிறிதளவே அனுகூலமாக உள்ளன. உயர்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில் நிதானமாக இருப்பது அவசியம்.
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதனும், கல்வித் துறையுடன் தொடர்புள்ள இதர கிரகங்களும் ஓரளவு சாதகமாக இருப்பதால், படிப்பில் அளவோடு முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு பண உதவி கிடைக்கும். நீங்கள் விருப்பப்படும், கல்வி நிறுவனத்தில் எளிதில் இடம் கிடைக்கும். ஆயினும், பாடுபட்டு படிக்க வேண்டிவரும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதியான ெசவ்வாயும், அவருக்குத் துணை நிற்கும் மற்ற கிரகங்களும் ஓரளவு சாதகமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். தண்ணீர்ப் பற்றாக் குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். பயிர்த் தொழிலுக்கு அத்தியாவசியமான நவீன உபகரணங்கள், மற்றும் விதை, உரங்கள், மருந்துகள் ஆகியவை நியாயமான விலைக்குக் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெற வழி பிறக்கும். நிதி நிறுவனங்கள் கைகொடுக்கும்.
பெண்மணிகள்: கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். "கொடுப்பதில், கணக்குப் பார்ப்பதில்லை.." ஆதலால், சனி பகவானின் தற்போதைய சஞ்சார பலம் உங்களுக்கு ஆதரவாகவே உள்ளது.சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்மணிகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கும். வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்து உதவும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, எளிதில் நல்ல ேவலை கிடைக்கும். ஆயினும், வேலைச் சுமை கடுமையாக இருக்கும், திருமணமாகாத கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.
அறிவுரை: இந்த ராசியில் பிறந்த அன்பர்களுக்கு, பல நல்ல வாய்ப்புகளை அளிக்கவுள்ளது இந்தச் சனிப் பெயர்ச்சி. பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில்தான் உள்ளது.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும், ஏழை ஒருவருக்கு, உணவு அளித்துவந்தால், கைமேல் பலன் கிடைக்கும். அனுபவத்தில் காணலாம்.


