6.03.2026
உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை
குடும்பம்: திருதீய ஸ்தானத்தில் அதாவது, மூன்றாமிடத்தில் சனி- சுக்கிரன் கூட்டுச் சேர்க்கை உள்ளது! ஏழரைச் சனிக்காலம் முடிவடைகிறது, இப்போது! நிம்மதிப் பெருமூச்சு விடலாம் நீங்கள்!! மகர ராசி அன்பர்களுக்கு, குடும்பப் பொறுப்புகளினால், இதுவரை ஏற்பட்டுவந்த அதிக அலைச்சல், வீண் செலவுகள் ஆகியவை இனி படிப்படியாகக் குறைவதை அனுபவத்தில் காணலாம். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும். திருமண முயற்சிகளில், தொடர்ந்து ஏற்பட்டுவந்த தடங்கல்களும், குழப்பங்களும் நீங்கி, நல்ல வரன் அமையும். குடும்பத்தில் பல சுப-நிகழ்ச்சிகள் நிகழும். விவாகமாகியுள்ள பெண்மணிகளுக்கு, கருத்தரிப்பதற்கு உகந்த காலகட்டமிதுவே!
உத்தியோகம்: சனி பகவான்தான் ஜீவன காரகர் என ஜோதிடக் கலை கூறுகிறது! அத்தகைய வீரியம் நிறைந்த கிரகம் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு ஊதிய உயர்விற்கும், பதவியுயர்விற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மகர ராசி அன்பர்களுக்கு, முயற்சியில் வெற்றி கிட்டும். மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த சம்பளமும் கிடைப்பதால், மனதில் உற்சாகம் மேலிடும். ஒருசிலருக்கு, புதிய வேலை காரணமாக, வெளியூர் செல்லவேண்டிவரும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். எளிதில் எண்ணம் நிறைவேறும்.
தொழில், வியாபாரம்: தன ஸ்தானத்தில், சனி - சுக்கிரன் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளது! வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவிருப்பதை சனி பகவானின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ருண ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவந்த பணத்தை வசூல் செய்வதற்கு ஏற்ற காலமிதுதான். ஆயினும், கூடியவரையில் முன் பணமில்லாமல், சரக்குகள் கொடுப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார முன்னேற்றத்தை சனி பகவான் மட்டும்தான் நிர்ணயிப்்பதில்லை என்பதை "பிருஹத் ஸம்ஹிதை" விளக்கியுள்ளது! நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சற்று குறையக்கூடும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப் போடுவது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளிமாநிலங்களிலிருந்து வந்து பணி புரியும் ஊழியர்களினால், சிறு, சிறு பிரச்னை ஏற்படக்கூடும். நிதானம், பொறுமை அவசியம். கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். கூடியவரையில், விட்டுக்கொடுத்து நடப்பது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
கலைத் துறையினர்: சனி பகவான் மட்டுமல்லாமல், சுக்கிரனும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், கலைத்துறை அன்பர்களுக்கு, வாய்ப்புகளும் வருமானமும், திருப்திகரமாகவே இருக்கும்! எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக் கொள்ள ஏற்ற தருணம் இதுவே! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறு உள்ளது. திரைப்படத் துறையினர், புதுப் படங்களில் துணிந்து முதலீடு செய்யலாம். தயாரிக்கும் படங்கள் நல்ல வசூலைப் பெற்றுத் தரும்.
அரசியல் துறையினர்: கட்சியில் ஆதரவு பெருகும். மக்களிடையேயும் செல்வாக்கு உயரும். இது உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவியாக நிற்கும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும் ஓரளவு அனுகூலமாக இருப்பதால், பாடங்களில் மனம் பதியும். நினைவாற்றல் ஓங்கும். விளையாட்டு, போட்டிகள் ஆகியவற்றிலும் வெற்றி பெற்று, முத்திரை பதிப்பீர்கள் உயர் கல்விக்கு எதிர்பார்த்திருந்த நிதியுதவி, எவ்வித சிரமமுமின்றிக் கிடைக்கும். அதனால் உற்சாகம் மேலிடும்.
விவசாயத் துறையினர்: சனி பகவானும், விவசாயத் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள செவ்வாயும், பகைக் கிரகங்களாவர்! ஆதலால், வயல் பணிகளில், பாடுபட்டு உழைக்க வேண்டிவரும். ஆயினும், உழைத்த அளவிற்கு விளைச்சல் இருக்கும். விளைபொருட்களுக்கு, சந்தையில் எதிர்பார்த்திருந்த விலையும் கிடைக்கும். கால்நடைகளின் பராமரிப்பில்் செலவுகள் அதிகரித்தாலும், அதிக சிரமமின்றி சமாளித்துவிடுவீர்கள். பணப் பிரச்னை இராது.
பெண்மணிகள்: பல குடும்பப் பிரச்னைகள் மனத்தை அரிக்கும். நெருங்கிய உறவினருடன் வாக்குவாதமும், பகையுணர்ச்சியும் மேலிடும். பொறுமை, நிதானம் மிக மிக அவசியம். இல்லாவிடில், உங்களை நீங்களே நொந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். புதிதாக வேலை தேடும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்திடமிருந்து, பணியில் சேரும்படி செய்தி வரும். ஆயினும், இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுத்து, ஏமாந்துவிட வேண்டாம்.
அறிவுரை: குடும்பப் பிரச்னைகளின்போது, உணர்ச்சிவசப்படாமல், பொறுமை, நிதானத்துடன் நிலைமையைச் சமாளிக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதம் வேண்டாம்.
பரிகாரம்: தினமும், காலை - மாலை இரு வேளைகளிலும். உங்கள் இஷ்ட தெய்வத்தையும். மறைந்த முன்னோர்களையும் வணங்கிவந்தால் போதும். நல்ல பலன் கிட்டும். வீட்டுப் பூஜையறையில் மாலை நேரத்தில் வழக்கமாக ஏற்றும் தீபத்துடன், பரிகார தீபமாகக் கூடுதல் நெய் அல்லது நல்லெண்ெணய் தீபம் ஒன்றை ஏற்றிவந்தால். அற்புதப் பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். பலன் கை மேல்! இதனை அனுபவத்தில் காண்பீர்கள்!


