6.03.2026
உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை
குடும்பம்: களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ம் இடத்திற்கு சனி பகவான் மாறியிருப்பது, அனுகூலத்தைத் தராது! குரு பகவானும், சாதகமாக இல்லை! கணவர் - மனைவியரிடையே பரஸ்பர ஒற்றுமையும், அந்நியோன்யமும் பாதிக்கப்படும். சிறு விஷயங்களுக்குக்கூட, கருத்து வேற்றுமை ஏற்படும். விவாக முயற்சிகளில் தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, கணவர் - மனைவி தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும். சிலருக்கு வீடுமாற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளும், பணப் பற்றாக்குறையும் உங்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். திருமண முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படும்.
உத்தியோகம்: சனி பகவானின் இந்தச் சஞ்சார நிலை மாற்றத்தினால், உத்தியோகம், பாதிக்கப்படும். வேலை மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் ஏற்படும் விரும்பத்தகாத சூழ்நிலைகள் உருவாகும். பொறுப்புகளும், பணிச் சுமையும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். பல கவலைகளினால், அன்றாடப் பொறுப்புகளில் கவனக் குறைவு ஏற்படும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். சிலருக்கு விருப்பத்திற்கு மாறான இடத்திற்கு மாற்றம் ஏற்படக்கூடும்.
தொழில், வியாபாரம்: சந்தையில்நியாயமற்ற போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும். லாபம் ஒரே சீராக நீடிக்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதைச் சற்று தள்ளிப்போடுவது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். புதிய முயற்சிகளில் தற்போது பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரம் அபிவிருத்தி சம்பந்தமாக, நிறுவனம் ஒன்றுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவது, எதிர்பாராத காரணங்களினால் தடைபடும்.
கலைத்துறையினர்: கலைத்துறை அன்பர்களுக்கு, சனி பகவானின் மீன ராசி சஞ்சாரம் ஓரளவே நன்மை செய்யும். ஆயினும், அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும், உடல் ஆரோக்கியத்தைச் சற்று பாதிக்கும். ஓய்வும், சிறிது மருத்துவ சிகிச்சையும் குணமளிக்கும். வருமானம் சிறிதளவே உயரும். நிச்சயமாகக் கிடைக்கும் என்று எண்ணியிருந்த சில வாய்ப்்்புகள் ஏமாற்றத்தைத் தரும். கிடைக்கும் வாய்ப்புகளிலும், எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் இராது.
அரசியல் துறையினர்: சனி பகவானின் இந்த மீன ராசி மாறுதல், கட்சியில் பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். ஆதலால், உங்கள் அந்தரங்கக் கருத்துக்களையும், செல்வாக்கு மிகுந்த பிற கட்சிகளுடன் உள்ள உறவுகள் பற்றியும், மனம்விட்டுப் பேசிவிடாமல் இருப்பது எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். அரசியல் துறையைத் தங்கள் பிடியில் கொண்டுள்ள, சுக்கிரனும், செவ்வாயும், ஓரளவு சுப பலம் பெற்று வலம் வருகின்றனர். ஆதலால், கட்சியில் உங்களுக்கு ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.
மாணவ - மாணவியர்: சற்று பாடுபட்டுப் படிக்க நேரிடும். உழைப்பு கடினமாகும். ஆயினும், கல்வி முன்னேற்றம் தடையின்றி நீடிக்கச் செய்வார் சனி பகவான்! வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், சனி பகவானின் நிலை காரணமாக, சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றிக் கனியை அளித்தருள்வார், சூரியனின் புத்திரரான சனி! கல்வித் துறையைத் தங்கள் பிடியில் வைத்துக் கொண்டிருப்பது வித்யாகாரகரான புதனும், மற்றும் சந்திரனும் ஆவர். இவ்விரு கிரகங்களும் அனுகூலமாக வலம் வருவதால், மாணவ - மாணவியருக்கு கல்வி முன்னேற்றம் நிச்சயம். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். ஆசிரிய பெருமக்களின் ஆதரவும், உதவியும் கைகொடுக்கும். சிலருக்கு, கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு ஒன்றிற்குச் சென்று, விசேஷ உயர் கல்வி ஒன்று பெறுவதற்கும் வாய்ப்்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன,
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு்ள்ளது, சனி பகவானும், செவ்வாயுமாவார் என பிருஹத் ஸம்ஹிதை கூறுகிறது! மேலும், செவ்வாய், சனி பகவானுக்குப் பகைக் கிரகமாவார்! ஆதலால், வயல் பணிகளில் கடினமாக உழைக்க வேண்டிவரும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது கடினமே. ஆடு - மாடுகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். இருப்பினும், கால்நடைகள் நல்ல அபிவிருத்தியை அடையும். உழைப்பிற்கேற்ற விளைச்சலைத் தவறாமல் தந்தருள்வார், சனி பகவான்!
பெண்மணிகள்: ராசிக்கு, ஸப்தம ஸ்தானமாகிய (7-ம் இடம்) சனி பகவான் சஞ்சரிப்பதால், சிறு விஷயங்களுக்கெல்லாம் கணவருடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை பாதிக்கப்படும். விவாக முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும்.
அறிவுரை: கைப் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்யவும். நெருங்கின உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
பரிகாரம்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஐந்து அன்ன உருண்டைகள் சிறிது பருப்பு, நெய், எள் கலந்து காகத்திற்கு வைத்து வந்தால் போதும். அதியற்புதப் பலன் கிட்டும்.


